பள்ளியில் படிக்கும்போதே காதலித்தார்கள்; எல்லைமீறிப் பழகினார்கள். அதனால், அவள் கர்ப்பமானாள். வயிறு வீங்கியதைக் கவனித்த பள்ளி ஆசிரியர்கள். தந்தையை வரவழைத்து ‘இந்த ஒழுங்கீனத்தை அனுமதிக்க முடியாது..’ என்று மாற்றுச் சான்றிழைக் கையில் திணித்து வீட்டுக்கு அனுப்பியது பள்ளி. இதற்கு காரணமானவரே தாலி கட்ட வேண்டும் என்பதில் அவள் பிடிவாதமாக இருந்து, காதலித்தவனையே கரம் பற்றினாள்.
காதல் அரும்பி ‘குடும்பம்’ நடத்திய வயதைச் சட்டம் அனுமதிக்காதுதான். ஆனாலும், குழந்தை பெற்று திருமணம்தான் சுமுகமாக நடந்துவிட்டதே! காதல் வாழ்க்கையை இனிக்க இனிக்க வாழ வேண்டியதுதானே! அதுதான் நடக்கவில்லை. ‘குழந்தைக்கு நான் அப்பா இல்லை’ என்று சந்தேகத் தீயைக் கொளுத்திப் போட்டான், கணவன். எந்நேரமும் சண்டை போட்டால் வாழ்க்கை நரகம்தானே! அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் தொடங்கி, மதுரை சரக டி.ஐ.ஜி. வரைக்கும் விவகாரம் சென்று, விருதுநகர் மாவட்ட கண்காணிப்பாளர் மூலம், காரியாபட்டி காவல் நிலையத்தில் சமரசம் செய்து வைத்தும், பிரச்சினை தீர்ந்தபாடில்லை. கணவனும் மனைவியும் ரத்த சொந்தங்களுடன் ஆலோசித்து ஒரு முடிவெடுத்தார்கள். அந்த படுபாதகச் செயல், கணவன் அமல்ராஜ், மனைவி மோகனா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) , கணவனின் பெற்றோர் மரிய லூகாஸ் – விமலா, மோகனாவின் தந்தை சூசை மாணிக்கம் என 5 பேரை கம்பி எண்ண வைத்திருக்கிறது.
கருவை 10 மாதங்கள் வயிற்றில் சுமந்து பிரசவித்து, 11 மாதங்கள் வரை வளர்த்த மகன் விகாஸை, தந்தை அமல்ராஜ் வற்புறுத்தியதால், வாளித் தண்ணீரில் மூழ்கடித்துக் கொலையே செய்துவிட்டாள் மோகனா. இனியொரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்துவிடலாம் என்ற சுயநலத்தால்தான், பெற்றோராலேயே குழந்தை விகாஸ் கொல்லப்பட்டிருக்கிறான். மோகனாவின் தந்தை சூசை மாணிக்கத்துக்கும், அமல்ராஜுவின் பெற்றோருக்கும் தெரிந்தே கொலை நடந்திருக்கிறது. . குழந்தை தவறி தண்ணீரில் விழுந்து இறந்துவிட்டது என்று அமல்ராஜுவும் மோகனாவும் நாடகமாடியது காவல்துறையின் விசாரணையில் அம்பலமானது. சம்பந்தப்பட்ட ஐவருமே கைதாகியுள்ளனர்.
‘பள்ளியில் படிக்கும்போதே காதலித்தவளாயிற்றே! உனக்கு நான் மட்டுமா காதலன்? நீ கர்ப்பமானதற்கு நானா காரணம்?’ என்றெல்லாம் வார்த்தைகளால் அமல்ராஜ் தினமும் வறுத்தெடுத்ததால், குழந்தை விகாஸ் மீது வெறுப்பு ஏற்பட்டு, கொலை செய்யவும் சம்மதித்திருக்கிறாள், மோகனா.
குழந்தைக்கு அம்மாதானே உலகம்! அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை என்கிறார்களே! உண்மைக் காதல் இல்லையென்பதால், ஒரு தாயின் மகத்துவத்தை, மோகனா உணர்ந்திருக்கவில்லை.