கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டு பாரதியார் நகர் தெருவை சேர்ந்தவர் முனுசாமி மனைவி மல்லிகா. இவர்களுக்கு ஆர்த்தி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகள் உள்ளார். இவர் சங்கராபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி.கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் ஆர்த்திக்கு இன்ஸ்டாகிராம் மூலம் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த சாய்குமார் என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் இருவருக்கும் இடையே காதலாக மாறியது இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் ஆர்த்தியின் தாய் மல்லிகாவிற்கு தெரிய வந்துள்ளது. இதனால் மல்லிகா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் காதலை கைவிட்டு படிப்பில் மட்டும் கவனம் செலுத்துமாறு தாய் மல்லிகா அறிவுரை கூறியதாக சொல்லப்படுகிறது.
ஆனால் ஆர்த்தியோ அதைக் கேட்காமல் இன்ஸ்டா காதலன் சாய்குமார் உடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த மல்லிகா பெற்ற மகளை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். அதன் காரணமாக மல்லிகா வீட்டில் முட்டை பொரியல் செய்து யாருக்கும் தெரியாமல் மகளிடம் ஆசை வார்த்தை கூறி எலி பேஸ்ட் என்ற விஷ மருந்தை கலந்து தனது மகளுக்கு கொடுத்துள்ளார். தாய் பாசத்தோடு கொடுத்ததால், அதனை வாங்கி சாப்பிட்டுள்ளார். அதன்பின் முட்டை பொரியலில் விஷம் கலந்துகொடுத்ததாக தாய் மல்லிகாவே, அவரது மகளிடம் கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மல்லிகா, சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் ஆர்த்தியை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பொண்பரப்பி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மல்லிகாவை கைது செய்தனர்.
காதலை கைவிட மறுத்த மகளை தாய் முட்டை பொரியலில் விஷ மருந்து கலந்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.