அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் - தமிழ்ச்செல்வி தம்பதிக்கு விக்னேஷ் (வயது 19), வினோத் (வயது 16) என்று 2 மகன்கள் உள்ளனர். விஸ்வநாதன் பெட்டிக் கடை வைத்துள்ளார். விக்னேஷ் சிறுவயது முதலே டாக்டர் ஆகவேண்டும் என்ற கனவில் தீவிரமாக படித்து வந்துள்ளார்.
செந்துறை தெரசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2017 ஆம் ஆண்டு +2 பொதுத் தேர்வில் 1006 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார் விக்னேஷ். அதன் பின்னர் கேரளாவில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையம் மற்றும் துறையூர் சௌடாம்பிகாவிலும் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். 2 முறை நீட் தேர்வு எழுதி, ஒருமுறை தோல்வியும் ஒருமுறை தேர்ச்சியும் பெற்றுள்ளார். இந்நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரியில் டாக்டர் சீட் கிடைத்தது. அவர்கள் நன்கொடை அதிக அளவில் கேட்டதால் இவரால் பணம் கொடுத்துச் சேர முடியவில்லை. இந்த நிலையில் 3 ஆவது முறையாக நீட் தேர்வு எழுத தீவிரமாக படித்து வந்துள்ளார். வருகின்ற 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் இந்த தேர்விலாவது அதிக மதிப்பெண் பெற்று டாக்டர் ஆக முடியுமா? என்று கடந்த 2 நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் இன்று அதிகாலை 4 மணிக்கு வீட்டைவிட்டு வெளியே சென்ற விக்னேஷ் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் தேடிப் பார்த்த போது, விக்னேஷ் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து கிணற்றில் இருந்து சடலமாக விக்னேஷ் உடலை உறவினர்கள் மீட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நீட் தேர்வு காரணமாக மாணவன் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காட்டுத் தீ போல பரவியது. அதனைத் தொடர்ந்து கிராம மக்களும் பா.ம.க மாநில துணைப் பொதுச் செயலாளர் திருமாவளவன் தலைமையில் பா.ம.க.வினரும் குவிந்தனர். அவர்கள் திடீரென அரியலூர் - ஜெயங்கொண்டம் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 'கிராமப்புற மாணவர்களின் உயிரைக் குடிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்', 'உயிரிழந்த மாணவன் குடும்பத்திற்கு 25 லட்சம் நிதி மற்றும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்' என்று கோஷமிட்டனர். உடலை எடுக்க வந்த ஆம்புலன்ஸையும் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தைத் தொடர்ந்து அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிமடம் தாசில்தார் தேன்மொழி, போராட்டக்காரர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களது கோரிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசுக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் சாலை மறியலைக் கைவிட்டனர். அதன் பின்னர் செந்துறை போலீஸார் விக்னேஷ் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விக்னேஷ் தற்கொலைக்கு நியாயம் கிடைக்கும் வரை உடலை பிரேதப் பரிசோதனை செய்து வாங்க மாட்டோம் என்று தொடர் போராட்டத்தில் உறவினர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து போலீசார் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பாழாய்ப்போன இந்த நீட் தேர்வு, குழுமூர் அனிதா தொடங்கி தற்போது இலந்தங்குழி விக்னேஷ் வரை மாணவ மாணவிகளின் உயிர்களைக் காவுவாங்கி வருகிறது. விக்னேஷ் கடந்த ஆண்டு நீட் தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதி இருந்தார். அதில் அவருக்கு 370 மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. ஆனால் அவருக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க மட்டுமே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரியில் அதிக கட்டணம் செலுத்தி படிக்கக் கூடிய அளவிற்கு வசதி இல்லாததால் அவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர இயலவில்லை. அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருந்தால் அவர் குறைந்த கட்டணத்தில் படித்து மருத்துவராகியிருப்பார். அவரது கனவு சிதைந்து போனது.
எப்படியும் வரும் 13ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வில் கலந்துகொண்டு அதிக மதிப்பெண் எடுத்து அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்துவிட வேண்டும் என்பதற்காக கடும் முயற்சி எடுத்து படித்துக் கொண்டிருந்துள்ளார் விக்னேஷ். ஆனால் பல்வேறு தரப்பிலிருந்தும் இந்த முறை நீட் தேர்வில் 500க்கும் மேற்பட்ட மதிப்பெண் எடுத்தால்தான் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று பலரும் கூறியுள்ளனர். அந்த அளவு மதிப்பெண் நம்மால் எடுக்க முடியுமா என்ற மன உளைச்சலில் இருந்த விக்னேஷ், டாக்டர் கனவு நிறைவேறப் போவதில்லை என்ற இறுதி முடிவுக்கு வந்துள்ளார். இதனால், இன்று கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விக்னேஷ் தற்கொலை குறித்து பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "நீட் தேர்வில் 500 -க்கும் கூடுதலான மதிப்பெண்கள் பெற்றால் மட்டும் தான் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று பல்வேறு தரப்பினரும் கூறியதால் கடுமையான மன உளைச்சலில் விக்னேஷ் இருந்து வந்தார். அதன் காரணமாக இன்று அதிகாலை அவரது வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
மாணவர் விக்னேஷின் தற்கொலைக்கு நீட் தேர்வும், அதைக் கட்டாயமாகத் திணித்து, தொடர்ந்து நடத்தி வரும் முந்தைய மற்றும் தற்போதைய ஆட்சியாளர்களும் தான் காரணம் என்று உறுதியாகக் கூற முடியும். அவர்கள் தான் மாணவர் விக்னேஷின் தற்கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும். 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை நடத்தப் பட்டிருந்தால், விக்னேஷ் எடுத்திருந்த மதிப்பெண்களின் அடிப்படையில் நிச்சயமாக இடம் கிடைத்திருக்கும். ஒருவேளை தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை அரசு தடுத்திருந்தால் கூட, நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் கடந்த ஆண்டு தனியார் கல்லூரியில் விக்னேஷ் சேர்ந்திருப்பார். இரண்டையும் செய்யத் தவறியவர்கள் தான் விக்னேஷின் தற்கொலைக்கு பொறுப்பு ஏற்றாக வேண்டும்.
எந்த நோக்கத்திற்காக நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதாக மத்திய அரசும், இந்திய மருத்துவக் குழுவும் கூறி வந்தனவோ, அந்த நோக்கம் முற்றிலும் தோல்வியடைந்து விட்டது என்பதை மாணவர் விக்னேஷின் தற்கொலை மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கிறது. மருத்துவக் கல்வித் தரத்தை உயர்த்தவும், மருத்துவக் கல்வி வணிகமயமாக்கப்படுவதை தடுக்கவும் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு கூறி வருகிறது. உண்மையாகவே மருத்துவக் கல்வியின் தரம் உயருகிறது என்றால், கடந்த ஆண்டு நீட் தேர்வில் விக்னேஷை விட, மிகவும் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் எல்லாம் பணத்தைக் கொட்டிக் கொடுத்து தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் சேர அனுமதிக்கப்பட்டிருக்கக் கூடாது. அதேபோல், மருத்துவக் கல்வி வணிகமயமாக்கப் படுவது கட்டுப்படுத்தப்பட்டிருந்தால், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைத்த நிலையில், விக்னேஷிடம் பணம் இல்லை என்பதைக் காரணம் காட்டி அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கக் கூடாது. இந்த இரண்டுமே நடக்காத நிலையில் நீட் தேர்வால் யாருக்கு என்ன பயன்?
தனியார் கல்வி நிறுவனங்களும், தனியார் சிறப்புப் பயிற்சி நிறுவனங்களும் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காகவே நீட் தேர்வு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் ஒவ்வொரு ஆண்டும் இன்னும் பல மாணவர்கள் நீட் தேர்வு கொடுக்கும் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்ளும் ஆபத்து உள்ளது. இதைத் தடுக்க நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, தற்கொலை செய்து கொண்ட விக்னேஷின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சம் நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
இதே போன்ற கருத்தை பல்வேறு கல்வியாளர்களும் அரசியல் கட்சி தலைவர்களும் முன்னெடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.