
புதுக்கோட்டையில் மின்தடை ஏற்பட்டதில் நடந்த வாக்குவாதத்தில் ஊராட்சி மன்றத் தலைவரைக் கல்லால் தாக்கி மண்டையை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குக்குடியை அடுத்துள்ளது பாத்தம்பட்டி ஊராட்சி. இந்தக் கிராமத்தில் நேற்று (14.10.2021) மாலைமுதல் மின்தடை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மின்தடையால் அவதியுற்ற பாத்தம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பாத்தம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராஜ் சோழன், 'இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளோம். எனவே மின் விநியோகம் சிறிது நேரத்தில் சரியாகிவிடும்.’ எனவே போராட்டத்தைக் கைவிடும்படி கூறியுள்ளார்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட கார்த்திக் ராஜா என்பவர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராஜ் சோழனை கல்லால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் தலையில் காயமடைந்த செல்வராஜ் சோழன் ரத்தம் வழிய வழிய போலீசாரிடம் புகாரளித்தார். அதன்பின் சிகிச்சைக்காக அவர் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள ஆலங்குடி போலீசார், ஊராட்சி மன்றத் தலைவரின் மண்டையை உடைத்த கார்த்திக் ராஜா என்ற நபரைத் தேடிவருகின்றனர்.