கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரிலிருக்கும் தனியார் முந்திரி ஆலையிலிருந்து ஏற்றுமதி செய்வதற்காக ஒரு கோடி 10 லட்சம் மதிப்புள்ள 16 டன் முந்திரிப்பருப்பு கண்டெய்னர் லாரி மூலம் ஏற்றப்பட்டு தூத்துக்குடி துறைமுகம் நோக்கி வந்துகொண்டிருந்தது. லாரியை தென்காசி மாவட்டத்தின் ஆலங்குளம் நகரைச் சேர்ந்த ஹரி ஓட்டி வந்திருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தின் புதுக்கோட்டை அருகிலுள்ள பொட்டலூரணிப் பக்கம் கண்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்த போது காரில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் கண்டெய்னர் லாரியை வழிமறித்து டிரைவருடன் கடத்தினர்.
இச்சூழலில் ஜி.பி.எஸ். கருவி செயல்படாததாலும் டிரைவரின் செல் ஸ்விட்ச் ஆஃப்பிலிருந்தது கண்டு அதிர்ந்து போன லாரி புக்கிங் அலுவலக கணக்கர் முத்துக்குமார் புதுக்கோட்டை போலீசில் புகார் செய்ய, தகவலறிந்த எஸ்.பி.ஜெயகுமார் தூத்துக்குடி ரூரல் ஏ.எஸ்.பி. சந்தீஸ் தலைமையில் புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் ரமேஷ் உள்ளிட்ட போலீசாரைக் கொண்ட தனிப்படை அமைத்து லாரியை மீட்க உத்தரவிட்டார். ஜி.பி.எஸ். கருவி அகற்றப்பட்டதால் லாரியின் போக்குபற்றி அறிய முடியாமல் திகைத்தது தனிப்படை. இதில் சிக்கல் ஏற்படவே சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் லாரி நாமக்கல் நோக்கி செல்வதையறிந்த தனிப்படையினர் அதனை விரட்டினர்.
போலீஸ் பின் தொடர்வதையறிந்த கண்டெய்னர் கடத்தல் கும்பல், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பக்கமுள்ள காக்கநேரி என்ற இடத்தில் லாரியை நிறுத்திவிட்டுத் தப்பியோடினர். அங்கு வந்த தனிப்படையினர் லாரியை மீட்டனர். இதனிடையே நாமக்கல் மாவட்ட எல்லையான திம்மநாயக்கன்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த காரை அம்மாவட்டப் போலீசார் மடக்கி அதிலிருந்தவர்களை விசாரித்திருக்கின்றனர். அவர்களின் முரண்பாடான தகவலால், போலீஸ் விசாரணையில் அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் 2வது மகனான ஞானராஜ் ஜெபசிங், விஷ்ணு பெருமாள், முள்ளக்காடு பாண்டி, கணபதி மாரிமுத்து, மட்டக்கடையின் மனோகரன், முறப்பநாடு செந்தில்முருகன், பாளை ராஜ்குமார் என்பது தெரியவந்திருக்கிறது. இவர்கள் லாரி டிரைவரைத் தாக்கி அவரைக் காரில் ஏற்றியும், கண்டெய்னர் லாரியை கடத்தியதும் தெரிய வந்திருக்கிறது. மேலும் சம்பவம் நடந்த இடம் தூத்துக்குடியின் புதுக்கோட்டை லிமிட் என்பதால் நாமக்கல் மாவட்டப் போலீசார் அவர்களை காருடன் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கண்டெய்னர் லாரி கடத்தப்பட்ட ஏழு மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு 7 பேரையும் கைது செய்த தனிப்படையை மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் பாராட்டினார்.
இதனிடையே தனது குடும்பத்திற்கும் தன் மகன் ஜெபசிங்கிற்கு ஏற்கனவே தொடர்பு கிடையாது என்பதற்கான ஆவணங்களைப் போலீசாரிடம் காட்டியிருக்கிறாராம் மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன். முன்னாள் அமைச்சரின் மகன் கடத்தல் காரனாக மாறியது உப்பு நகரைப் பரபரப்பாக்கியுள்ளது.