கோவையில் திருநங்கை ஒருவருக்குக் காவலர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் காவலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை அம்மன்குளத்தில் திருநங்கை ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன்பு செல்ஃபோன் காணாமல் போனதாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தன் வீட்டுக்கு அருகிலுள்ள பெண் மீது சந்தேகம் இருப்பதாக அந்தப் புகாரில் திருநங்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரிக்கக் கோவை பந்தயச்சாலையைச் சேர்ந்த காவலர் மூவேந்தன் சென்ற நிலையில் அவர் விசாரணையின்போது தனக்குப் பாலியல் தொல்லை தந்ததாக பாதிக்கப்பட்ட திருநங்கை தெரிவித்துள்ளார். மேலும், செல்ஃபோன் திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்ட பெண்ணிற்கும் விசாரணையின்போது காவலர் மூவேந்தன் பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பெண் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தபோதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்த திருநங்கை, இதுகுறித்து கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில், பந்தயச்சாலையைச் சேர்ந்த காவலர் மூவேந்தன் மீது மதுபோதையில் அவதூறாகப் பேசி தவறாக நடந்துகொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.