பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஏழு உட்பிரிவுகளை இனி தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப் பெயரில் அழைக்க வேண்டும் என்கிற தமிழக அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து வெள்ளாளர் சங்கத்தினர் திருச்சியில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஏழு உட்பிரிவுகளை இனி தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப் பெயரில் அழைக்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இது வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என கூறி, தமிழக அரசின் இந்த முடிவை கண்டித்து கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் கோயம்புத்தூரிலிருந்து திருச்சி வழியாக மயிலாடுதுறை செல்லும் ஜனசதாப்தி ரயிலை மறித்து வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைந்து போக கூறியும் அவர்கள் கலைந்து போகாமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றபோது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து வலுக்கட்டாயமாக அவர்களை அழைத்து சென்ற காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இந்த போராட்டத்தால் அந்த ரயில் 15 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. ரயில் மறியலால் ஜங்சன் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.