தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 44 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தங்கச்சிமடத்தில் 34 செ.மீ., பாம்பனில் 28 செ.மீ., மண்டபத்தில் 27.1 செ.மீ., ராமநாதபுரத்தில் 12.6 செ.மீ. என மழை பதிவாகியுள்ளது. இந்த மழை பதிவானது நேற்று (20.11.2024) காலை 6 மணி முதல் இன்று காலை 6 வரையிலான அளவு ஆகும்.
இத்தகைய சூழலில் தான் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்று (21.11.2024) வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிப்பது தொடர்பாக அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். முன்னதாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.