கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்தவர் கண்ணன். வழக்கறிஞரான இவர் நேற்று (20.11.2024) ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் இருந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் கண்ணனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த கண்ணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வழக்கறிஞர் கண்ணனை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்தவர் பயிற்சி வழக்கறிஞர் ஆனந்தன் என்பது தெரியவந்தது.
அதே சமயம் வழக்கறிஞர் கண்ணனை, ஆனந்தன் அரிவாளால் வெட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அரிவாளால் வெட்டிய ஆனந்தனை தீவிரமாகத் தேடி வந்தனர். இதற்கிடையே ஆனந்தன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும் இந்த கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய மனைவியை சத்யாவதியையும் போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியிலும், நீதித்துறையினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சத்யாவதிக்கு போன் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலமாக வழக்கறிஞர் கண்ணன் தொல்லை கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்திருந்ததும் கவனிக்கத்தக்கது.