சென்னை தண்டையார்பேட்டை சேர்ந்த மருத்துவ மாணவர் உதித்சூர்யா இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்செய்து தேனி மருத்துவ கல்லூரியில் மாணவனாக சேர்ந்த புகார் வெளிவந்ததை அடுத்து உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஒரு வாரம் தலைமறைவுக்கு பின்னர் சிபிசிஐடி தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தது. அதன் அடிப்படையில் பல இடங்களில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் மேலும் மூன்று பேரை நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி சேர்ந்த இர்ஃபான் என்ற மாணவரும் மருத்துவம் படிக்க வைக்க நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக கூறி அவரது தந்தை டாக்டர் முஹம்மத் ஷஃபியை சிபிசிஐடி போலீசார் செப்டம்பர் 29 ஆம் தேதி கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
இர்ஃபான் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் மாணவராக சேர்ந்துள்ளார். தான் மாட்டி கொள்வோம் என தெரிந்த மாணவன் இர்ஃபான் கல்லூரியில் விடுப்பு எடுத்துவிட்டு கடந்த 8ம் தேதி மொரிஷியஸ் நாட்டுக்கு சென்றுவிட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் தற்போது மாணவன் இர்ஃபான் சேலம் நடுவர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சிவா முன்னிலையில் ஆஜரானர். ஆஜரான மாணவன் இர்ஃபானை அக்டோபர் 9 ஆம் தேதிவரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.