நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, சிலர் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்திருப்பதாக அண்மையில் புகார்கள் கிளம்பின. இதையடுத்து அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் உதித்சூர்யா, ஆள்மாறாட்டம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதையடுத்து, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்த, வாணியம்பாடியைச் சேர்ந்த முகமது ஷபி மகன் முகமது இர்பான் என்ற மாணவரும் ஆள்மாறாட்டம் செய்து, குறுக்கு வழியில் கல்லூரியில் சேர்ந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்ய முயற்சித்தனர்.
ஆனால் தலைமறைவாக இருந்த முகமது இர்பான் அக். 1ம் தேதி (செவ்வாய்க்கிழமை) சேலம் மாவட்ட இரண்டாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் சரணடைந்தார். நீதித்துறை நடுவர் சிவா, மாணவர் முகமது இர்பானை 15 நாள்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், முகமது இர்பானை விசாரணை செய்வதற்கு வசதியாக காவல்துறையினர் அவரை புதன்கிழமை (அக். 9) சேலம் மத்திய சிறையில் இருந்து அழைத்துச்சென்று தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்ற நடுவர், முகமது இர்பானை அக். 15ம் தேதி வரை தேனி மாவட்ட கிளைச்சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இரவு 8 மணியளவில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.