கீரமங்கலம் பகுதியில் அதிகரித்துவரும் காய்ச்சல் பாதிப்பால் பொதுமக்கள் அவதி!
கீரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காய்ச்சல்:
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், செரியலூர், கொத்தமங்கலம், சேந்தன்குடி, நகரம், குளமங்கலம், பனங்குளம், மேற்பனைக்காடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த பல நாட்களாக காய்ச்சலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 20 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொசு உற்பத்தியும் அதிகமாக உள்ளதால் கடந்த 15 நாட்களாக காய்ச்சல் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அதிகமாக காய்ச்சல் உள்ளது.
வெளியூர்களில் சிகிச்சை:
காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 75 பேர் காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளவர்களுக்கு குளுகோஸ் ஏற்றப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் கீரமங்கலத்தில் உள்ள தனியார் கிளினிக்களில் சிகிச்சை பெற்ற பலர் காய்ச்சல் குறையாத நிலையில் திருச்சி, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, மற்றும் பல ஊர்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்பனைக்காடு கிராமத்தில் இருந்து சுமார் 20 க்கும் மேற்பட்டோர் திருச்சி போன்ற ஊர்களில் தனியார் மருத்துவமனைகளில் சகிச்சை பெற்று வருகின்றனர்.
நாளுக்கு நாள் காய்ச்சல் அதிகரித்து வருவதால் கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரா.பகத்சிங்