இந்தியா முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேவேளையில், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அப்பிரச்சினையிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறது. மேலும், உலக நாடுகளிடம் இருந்து உதவிக்கரம் நீட்டப்பட்டு, அமெரிக்காவில் இருந்து 318 ஆக்சிஜன் செறிவூட்டிகள், துபாயிலிருந்து 2 டேங்கர்கள் ஆகியவை டெல்லி வந்தடைந்துள்ளன.
மத்திய அரசு, மாநிலம் வாரியாக ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள அந்தந்த மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மாநில அரசுகளும் மாவட்டம் வாரியாக இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை, அவற்றில் பயன்படுத்தக்கூடிய ஆக்சிஜன் அளவு, கையிருப்பு மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கை என அனைத்தையும் புள்ளி விவரங்களோடு சேகரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, திருச்சி மாவட்டத்தில் உள்ள 300க்கும் அதிகமான மருத்துவமனைகளில் 20 மருத்துவமனைகளுக்கு மட்டுமே கரோனா சிகிச்சை அளிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த 20 மருத்துவமனைகளின் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தி, தனியார் மருத்துவமனைகள் தாங்கள் கையிருப்பு வைத்திருக்கக்கூடிய ஆக்சிஜன், ஒருநாளில் நோயாளிகளுக்கு செலவிடப்படும் அளவு, நோயாளிகளின் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து அறிக்கை தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும். கரோனா நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை வழங்க வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற நிலை ஒருபோதும் ஏற்பட்டுவிடக்கூடாது. தினமும் மாவட்ட நிர்வாகத்திற்கு 20 மருத்துவமனைகளில் இருந்தும் அறிக்கைகள் முறையாக வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.