சென்னையில் அரசு வழிகாட்டுதல்களை மீறி பட்டாசு வெடித்த 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பாரம்பரிய வழிபாடு மற்றும் கலாச்சார முறைகளில் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து,இனிப்புகள் பரிமாறி தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர். இதில் காற்று மாசு, கரோனா ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மக்கள் பட்டாசு வெடிப்பதற்கு நேரக் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது தமிழக அரசு. அதன்படி, தமிழகத்தில் தீபாவளியன்று காலை 06.00 மணி முதல் 07.00 மணி வரையும், இரவு 07.00 மணி முதல் 08.00 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னையில் இன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பட்டாசு வெடித்ததாக 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பூந்தமல்லி, போரூர், ஆவடி, அம்பத்தூர், கொரட்டூர், மாங்காடு உள்ளிட்ட அம்பத்தூர் காவல் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.