Skip to main content

'எனக்கு மிரட்டல் வருகிறது' - மாவட்ட கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் ரத்து

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

nn

 

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் இன்று நடந்தது. மொத்தமான 14 கவுன்சிலர்கள் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலைவர் தமிழ்செல்வி தலைமையில் நடந்த கூட்டத்தில் 4.79 கோடிகளுக்கான பணிகளுக்கான தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. கூட்டத்தில் தலைவர் தமிழ்ச்செல்வி வார்டிற்கு 65 லட்சம் நிதியும், இரண்டு கவுன்சிலர்களுக்கு தலா 27 லட்சம் வீதம் ஒதுக்கப்பட்டும், பிற கவுன்சிலர்களுக்கு தலா 20 லட்சம் ஒதுக்கப்பட்டதாகத் தெரிகிறது. அது சமயம் 2வது வார்டு உறுப்பினர் பூங்கொடி அனைத்து வார்டுகளுக்கும் சம அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், பேதம் கூடாது என்றார். தலைவர் வார்டுக்கு அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

 

அவரது கேள்விக்கு பதில் சொன்ன தலைவர் தமிழ்ச்செல்வி நான் அப்படி செய்யக் கூடாது தான். ஆனாலும் எனக்கு மிரட்டல் வருகிறது. எனவே வேறு வழியில்லை என்று வெளிப்படையாகவே பேசினார். இதனால் கூட்டத்தில் குழப்பம், பரபரப்பு ஏற்பட்டது. மிரட்டலுக்கு பயந்து நிதி ஒதுக்கினால், நாளை நாங்களும் அப்படிச் செய்தால் எங்களுக்கும் நிதி ஒதுக்குவீர்களா? என்று உறுப்பினர்கள் கேட்டனர். அதற்கு தலைவர் தமிழ்ச்செல்வியோ மிரட்டலுக்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன் என்றவரிடம், இப்போது நீங்களே ஒப்புக் கொண்டீர்கள். அதை மாவட்ட ஆட்சியர், காவல்துறையில் புகார் கொடுக்கலாமே என்று உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. என் நிலைமை அப்படி என்று மீண்டும் சொல்லி இருக்கிறார்.

 

nn

 

விவகாரம் அப்படி எனில் தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். அதன் பின் கூட்டம் முடிந்து விட்டது என்று அறிவித்து விட்டு வெளியேறிய தமிழ்ச்செல்வி, பின்னர் வந்து கூட்டத்தை முறைப்படி முடிக்க வேண்டும். அதனால் தீர்மானங்களை நிறைவேற்றுமாறு கையெழுத்து போடும்படி கூறியிருக்கிறார். ஆனால், எந்த ஒரு உறுப்பினர்களும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்காமல் போனதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

 

நாம் உறுப்பினர் கனிமொழியிடம் கேட்டதில், “தலைவர் கூட்டத்தை முறையாக நடத்தவில்லை. அவர்கள் இஷ்டப்படி ஒதுக்கி இருக்கிறார்கள் அந்த உறுப்பினர் மிரட்டியதாக தலைவர் தமிழ்ச்செல்வி கூறினார். பொத்தாம் பொதுவாக கூறக்கூடாது. மிரட்டியதை ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும் என்று சொன்னதற்கு தலைவர் எதுவும் சொல்லவில்லை” என்றார்.

 

நாம் தலைவர் தமிழ்ச்செல்வியின் கருத்தறியும் பொருட்டு அவரைத் தொடர்பு கொண்டபோது அவர் நமது அழைப்புகளை ஏற்கவில்லை.

 

 

சார்ந்த செய்திகள்