இளையராஜாவின் இசைக்குழுவில் மூத்த தபேலா இசைக்கலைஞர் கண்ணையா உடல்நலகுறைவால் புதன்கிழமை காலமானார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள கண்ணையாவின் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார் இளையராஜா.
இளையராஜாவின் பெரும்பாலான பாடல்களை வாசித்தவர் கண்ணையா. இளையராஜாவுடன் ஆரம்ப காலம் முதல் உடனிருந்தவர். இளையராஜா மீது கொண்ட பாசத்தினால் அவரை விட்டு வேறு யாருக்கும் வாசிக்க கண்ணையாவுக்கு மனமில்லை. அதேபோல் இவர் இருந்தால் மட்டுமே இளையராஜா கம்போசிங் வைத்து கொள்வார். இவர் இல்லையென்றால் பாடல் கம்போசிங் இருக்காது என்கிறார்கள்.
தமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றிய ஜி.கே.வெங்கடேஷ் தலைமையிலான குழுவில் இளையராஜாவும், கண்ணையாவும் பணியாற்றினார்கள். இளையராஜா மீது கொண்ட பாசத்தினால் 40 வருடங்களுக்கு மேல் அவரது இசைக்குழுவில் 40 வருடங்களுக்கு மேல் இருந்தார்.
பொன்னுக்கு தங்க மனசு படத்தில் ''தேன் சிந்துதே வானம்'' என்ற பாடல் மூலம் கண்ணையா பிரபலமானார். இளையராஜா குழுவில் இணைந்து எத்தனையோ பாடல்களில் பணியாற்றியிருந்தாலும், தான் தபேலா வாசித்த மூன்றாம் பிறை படத்தில் வரும் ''கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உனை நானே'' என்ற பாடல்தான் இளையராஜாவுக்கு மிகவும் பிடிக்கும் என்று கண்ணையா பேட்டிகளின்போது கூறியிருக்கிறார்.