கோவை உக்கடம் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீரென நடத்திய சோதனையில், கார்பைடு கல் மூலம் பழுக்க வைகப்பட்டு விற்பனை செய்யப்பட்ட 600 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மாம்பழ வரத்து அதிகரித்து வரும் நிலையில் வியாபார நோக்கில் சில பழ கடைகளில் ரசாயன கல் மூலம் பழங்கள் பழுக்க வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உட்கொள்வதால் பல்வேறு நோய்கள் வரக்கூடும் எனவும் அது போன்று பழுக்க வைத்த பழங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உணவு பாதுக்காப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் கோவை உக்கடம் பகுதியிலுள்ள பழ கடைகளில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் விற்பனை செய்து வருவதாக வந்த தகவலையடுத்து கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் விஜயலட்சுமி தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.
காலை முதல் சுமார் 10க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 600 கிலோ எடையிலான ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அம்மாம்பழங்களை பெனாயில் ஊற்றி அழித்தனர். மேலும் பல இடங்களில் தொடர் சோதனையானது நடைபெற்று வருகிறது.