
அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக பாஜக தலைவர்களும், அதிமுக தலைவர்களும் தொடர்ந்து தெரிவித்து வந்தாலும் அவ்வப்போது சில மாறுபட்ட கருத்துகளால் இருவருக்கும் இடையே முரண் என்பது தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.
நேற்று சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக உறுப்பினர்கள் சேர்ப்பு குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில்,“அண்ணாமலையைப் பற்றி ஏன் பேசிக்கொண்டே இருக்கிறீர்கள். இப்படிப் பேசித்தான் அவர் பெரிய ஆளாகிறார். நீங்கள் அவரைப் பற்றி பேச வேண்டாம். நான் கட்சிக்கு வந்து 50 வருடங்கள் ஆகப்போகிறது. என்ன நடக்கும் ஏது நடக்கும் என்பது தெரியும். அவர் பேட்டி கொடுத்து பெரிய ஆளாகப் பார்க்கிறார். தயவு செய்து அவரது கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள்'' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று அதிமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் ஆலோசனை முடிந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்துப் பேசிய செல்லூர் ராஜு, ''மதுரையில் ஜெயலலிதா இருந்த பொழுது நடைபெற்றது போல் இப்பொழுதும் பெரிய மாநாடு நடைபெற இருக்கிறது. மதுரையில் கடல் இல்லை. ஆனால் விரைவில் மக்கள் கடல் அங்கு உருவாகும். அதிமுக எவ்வளவு பலமாக இருக்கிறது, மக்கள் நிறைந்த கட்சி என்பதை மீண்டும் உலகத்திற்கு காட்டும் வகையில் அந்த மாநாடு வெற்றிகரமான மாநாடாக அமையும். எங்களை விமர்சனம் செய்பவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லிவிட்டார். தகுதி இல்லாதவர்கள் அப்படி பேசுவார்கள். அவர்களுக்கு பதில் சொல்வதற்கு எதுவும் இல்லை. ஒருவர் பதவியை எப்படி வேண்டுமானாலும் பெறலாம் அதை தக்கவைக்க திறமை வேண்டும். நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது வல்லவனாகவும் இருக்கணும். அதனால்தான் பொறாமையில் இன்று இப்படி பேசுகிறார்கள். கட்சியைப் பலப்படுத்த வேண்டும். சிறப்பாக கொண்டு வர வேண்டும் அதற்கான பணிகளை மாவட்டச் செயலாளர்கள் செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
அண்ணாமலைக்கு சரியான பதிலடியை எங்கள் பொதுச் செயலாளர் கொடுத்திருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் புரட்சி பயணம் தொடங்குகிறது என அண்ணாமலை சொல்லி இருக்கிறார். அந்த பயணத்தை தொடங்கும்போது அவர் என்ன பேசுகிறார் என்பதை பொறுத்து விமர்சனம் வரும். ஆனால் கன்னியாகுமரியில் இருந்து யார் பாதயாத்திரை தொடங்கினாலும் கடைசியில் போய் முடிவது ஜெயிலுக்கு போறாங்க அல்லது பதவி விட்டு போய்விடுகிறார்கள் அல்லது ஒன்னும் இல்லாமல் போய் விடுகிறார்கள். இதுதான் இதுவரை நடந்திருக்கிறது. அத்வானி வந்தாரு ஒன்னும் இல்லாமல் போய்விட்டார். வைகோ வந்தார் மாபெரும் தலைவராக இருந்தார் கடைசியில் ஒன்னும் இல்லாமல் போய்விட்டார். இப்போது ராகுல் வந்தார் அவர் நல்லாதான் இருந்தார் தற்பொழுது அவருக்கு பதவியும் போய்விட்டது. இப்போது அண்ணாமலை போகிறார். அதிமுக காரர்களைப் பற்றி யார் பேசினாலும் அவர்கள் துரும்பை எறிந்தால் நாங்கள் தூணை எறிவோம் என்பது எல்லோருக்கும் தெரியும்'' என்றார்.