தாமிரபரணி ஆற்றின் தூய்மையை அரசு பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால் தாமிரபரணி கூவம் ஆறு போல் மாறிவிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த காமராஜ் என்பவர் 2018 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் ஒன்று செய்திருந்தார். அதில் திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா புஷ்கர விழா நடைபெறும். 2018 அக்டோபரில் மகா புஷ்கர விழா நடைபெற்றது. ஆற்றை ஒட்டி பழமையான மண்டபங்கள் மற்றும் படித்துறைகள் ஏராளமான இருக்கிறது. அவற்றை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும். தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் . அதற்காக சுத்திகரிப்பு நிலையங்களை உருவாக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
தாமிரபரணி ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க வேண்டும். இல்லை என்றால் தாமிரபரணி ஆறு சென்னையில் உள்ள கூவம் ஆறு போல் மாறிவிடும் என சென்னை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு நீதிபதிகள் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். தாமிரபரணி ஆற்றில் உள்ள 84 மண்டபங்கள் மற்றும் படித்துறைகளை யார் பராமரிப்பது, பாதுகாப்பது என்பது குறித்து பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், பொதுப்பணித்துறையின் எல்லை நீர்வள ஆதார அமைப்பின் தலைமை பொறியாளர் நேரில் ஆஜராகி இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.