தமிழ்நாடு விவசாயிகளின் திருச்சி மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இன்று (02.08.2021) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தப் போராட்டத்தில் நீதிமன்ற உத்தரவுடன் செயல்பட்ட மாட்டுவண்டி மணல் குவாரியை மீண்டும் திறக்க உத்தரவிட வேண்டும். அதேபோல் தாளக்குடி மாதவப் பெருமாள் கோவில் மாட்டுவண்டி மணல் குவாரியைத் திறக்க வேண்டும். மேலும், மூன்று மாதமாக போராட்டம் நடத்தியும் தங்களை தமிழ்நாடு அரசு வஞ்சித்துவருவதாகவும், மூன்று மாதமாக இந்தத் தொழிலை மட்டும் நம்பியிருக்கக் கூடிய குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளப்பட்டுள்ளோம்.
எனவே, “தமிழ்நாடு அரசு உடனடியாக மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். எங்களுடைய கோரிக்கையை ஏற்க மறுத்தால் 5,000 மாடுகளை நரபலி கொடுக்க அனுமதி வழங்க வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு நீர்வள, கனிமவளத்துறை அமைச்சர்களுக்கும் தமிழ்நாடு முதல்வருக்கும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும், பொதுப்பணித்துறைக்கும் பல கடிதங்கள் எழுதியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் உடனடியாக தமிழ்நாடு அரசு இந்த மனுக்களை ஏற்று அனுமதி வழங்கிட வேண்டும். அடுத்தக் கட்ட போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு எங்களைத் தள்ளிவிடாமல் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.