கரோனோ வைரஸ் தொடர் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் பெரிய பதட்டத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு இயக்கப்படும் விமானங்கள் அனைத்தும் கடந்த 17ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டன.
இதனால் கடந்த 17ஆம் தேதி இரவு திருச்சியில் இருந்து ஏா் ஏசியா விமானத்தில் மலேசிய செல்ல முன்பதிவு செய்திருந்த 70 போ் மலேசியா செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதில் ஏமாற்றம் அடைந்த மலேசிய பயணிகள் உடனடியாக தங்கள் நாடுகளுக்கு அனுப்ப வலியுறுத்தி திருச்சி விமானநிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த மலேசிய தூதரக அதிகாரிகள் திருச்சி வந்து போராட்டக்காரா்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி மலேசிய அரசுக்குத் தகவல் கொடுத்தனா்.
இதனைத் தொடா்ந்து திருச்சி, சென்னை, கொச்சி உள்ளிட்ட மாநிலங்களில் சிக்கித்தவித்த 520 பேரும் திருச்சி விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனா்.
தவிக்கும் பயணிகளில் வயது முதியவர்கள், கா்ப்பிணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஒரு பெரிய பட்டியலைத் தயார் செய்தனர் அதில் முதல்கட்டமாக 186 பேரை அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை மலேசிய அரசு செய்து வந்தது.
அதன் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை அன்று மலேசியாவில் இருந்து தனி விமானம் திருச்சி வந்தது. அந்த தனி விமானத்தில் திருச்சியிலிருந்து செல்லவிருந்த 186 மலேசிய பயணிகளுக்கு பல்வேறு கட்ட சோதனைகள் முடிவுற்று ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்டு சென்றனா்.
மீதமுள்ள அனைவரும் விரைவில் மலேசியா அழைத்துச் செல்லப்படுவார்கள் என மலேசியத் துணைத் தூதரக அதிகாரிகள் உறுதி அளித்தனா். இதனால் கடந்த 5 நாட்களாக மலேசியா விமானிகள் திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கி வருகிறார்கள். அதற்கான உணவு, தங்கும் இடம் தேடி வருகிறார்கள்.
இந்தத் தகவலை கேள்விப்பட்ட திருச்சியைச் சுற்றி உள்ள மலேசியா செல்வதற்கு தவிக்கும் பயணிகள் தினமும் திருச்சி விமானநிலையம் வந்து அடுத்து மலேசியாவிற்கு எப்போது விமானம் வரும் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
திருச்சி விமானநிலைய அதிகாரிகளோ ஏற்கனவே கணக்கு எடுக்கப்பட்ட மலேசிய விமானிகள் மட்டுமே அழைப்பு கொடுக்கப்படும். அவர்களை முதலில் அனுப்புவதற்கு மட்டுமே தற்போதைக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்கிறார்கள்.
இதனால் மலேசியா எப்படியாவது சென்று விடமாட்டோமா என்கிற தவிப்பில் தினமும் திருச்சி விமானநிலையம் வந்து செல்கிறார்கள் மலேசிய பயணிகள்.