
சென்னையில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கல்லூரி மாணவர்களை தன்னார்வலர்களாக ஒருங்கிணைத்து வீடுவீடாக நோய் தொற்று குறித்து கணக்கெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள், மாணவிகள் முன்வந்து இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை இராயபுரம் மண்டலம் மண்ணடி, தம்பு செட்டித் தெருவை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தன்னார்வலராக பணியாற்றி வந்த நிலையில், அந்த மாணவியிடம் சென்னை பெருநகர உதவி பொறியாளர் கமலக்கண்ணன் என்பவர் தொலைபேசியில் ஆபாசமாக பேசிய பரபரப்பு ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

கமலக்கண்ணன் அந்த ஆடியோவில், இரண்டு வருடத்திற்கு முன்பு எனக்கு திருமணம் ஆவதற்கு முன்பு நீ வந்திருக்கலாமே, வந்திருந்தா நீ மிஸஸ் கமல்.
நான் உண்மையைத்தான் சொல்றேன், உன்னை அந்த அளவுக்கு பிடிக்கும். உன்னை அந்த அளவுக்கு பிடித்ததால்தான் நான் போய் உயர் அதிகாரிகளுடன் பேசி உன்னை வேலைக்கு வைத்தேன். என் சேலரி எவ்ளோ தெரியுமா உனக்கு, 78 ஆயிரம் பர் மந்த். என்னோட சேலரி 78000-னா நீ எப்படி இருப்ப நினைச்சு பாரு. நீ எப்ப ஃப்ரீயோ அப்ப பேசு என்கிறார்.
இந்த ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் கமலக்கண்ணனை பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நடவடிக்கை எடுத்துள்ளார்.