மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உள்ள வலையப்பட்டி என்ற கிராமத்தில் அங்கன்வாடியில் உதவியாளராகப் பணிபுரிய மாவட்ட ஆட்சியரால் 10 நாள்களுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த பெண் நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்கச் சென்றுள்ளார்.
இவரது பணி குழந்தைகளுக்கான சமையல் கூட உதவியாளர் பணியாகும். இதை அறிந்த அந்த கிராமத்ததில் உள்ள மாற்று சமூகத்தினர் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் சமைத்தால் அங்கன்வாடிக்கு குழந்தைகளை அனுப்பமாட்டோம் எனவும் எதிர்ப்பு தெரிவித்து சென்றனர். அதனால், அவர் வேறு ஒரு கிராமத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அதேபோல் மற்றொரு தாழ்த்தப்பட்ட சமுகப் பெண் மதிப்பனூர் என்ற ஊரில் அங்கன்வாடி ஊழியராக சமையல் உதவியாளராக நியமனம் செய்துள்ளார் மாவட்ட ஆட்சியர் சாந்தகுமார். அவரும் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சர்ச்சை தொடர்பாக நியமிக்கப்பட்ட ஊழியர்கள் இருவரையும் அழைத்து பேசிய அதிகாரிகள் அவர்களை கிழவனுர், மத்திபனூருக்கு கூடுதல் பணியாற்ற வாய்மொழி உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
அந்த கிராமத்தில் ஏற்கனவே இரு பிரிவினர்களுக்கு இடையே சமூக மோதல்கள் இருந்து வருவதாக கூறப்படும் நிலையில் அவ்வப்போது அதிகாரிகள் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தாலும் தீர்வு ஏற்படாத நிலைமை இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சமூக ரீதியிலான பிரச்சனை குறித்து விசாரிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் குழு அனுப்பப்பட்டுள்ளதாக பொறுப்பு ஆட்சியர் சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இப்படி சாதியின் பெயரில் நவீன தீண்டாமை அரங்கேறி வருவது சமூக வலைதளத்தில் பேசு பொருளாகவும், பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.