தண்ணீர் திறந்தே ஆகவேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் விரும்பினால், அவரே கர்நாடகாவுக்கு வந்து இங்குள்ள அணைகளின் நிலைமையை நேரில் தெரிந்து கொண்டு, அவரே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கட்டும் என குமாரசாமி தெரிவித்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்வதற்காக குமாரசாமி, நேற்று மாலை தனி விமானத்தில் திருச்சி வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,
காவிரி பிரச்னையில் இரு மாநில விவசாயிகளும் பாதித்துள்ளனர். இந்த பிரச்னைக்கு இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து செயல்படுவோம். கடைசி 3 ஆண்டுகளில் கர்நாடக அணைகளில் போதுமான நீர் இல்லை.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அருளால் மழை பெய்து அணைகள் நிரம்பினால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும். ஆனால், தண்ணீர் திறந்தே ஆக வேண்டும் என வலியுறுத்துவதால் இங்குள்ள நிலைமையை தமிழகத்தில் இருப்பவர்கள் யாரும் புரிந்து கொள்ளவில்லை என்றே கூற வேண்டும்.
தண்ணீர் திறந்தே ஆகவேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் விரும்பினால், அவரே கர்நாடகாவுக்கு வந்து இங்குள்ள அணைகளின் நிலைமையை நேரில் தெரிந்து கொண்டு, அவரே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கட்டும். அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம். எனது பதவியேற்பு விழாவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தை சேர்ந்த பிற கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி தருவது குறித்து இப்போதைக்கு எதுவும் கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.