
சிதம்பரம் அருகே பின்னத்தூரில் கான்சாகிப் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் சையத் சக்கப் தலைமை தாங்கினார். பின்னத்தூர் ஜமாத் தலைவர் ஜெகபர்அலி, முன்னாள் தலைவர் ரைசூல், சங்கத்தின் பொருளாளர் ரவிச்சந்திரன், செயலாளர் கண்ணன் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் கற்பனை செல்வம், பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் ஜீவா, சேத்தியாதோப்பு அணைக்கட்டு பாசன சங்கச் செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பேசினார்கள்.
இதில் வரும் 25ம் தேதி சிதம்பரம் பிச்சாவரம் சாலையில் உள்ள பெரிய மருது என்ற இடத்தில் நிவாரணம் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதைக் கண்டித்தும், விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், மணிலா பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாகக் கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும் சாலைமறியல் போராட்டம் நடத்துவது எனவும், வரும் 26-ஆம் தேதி சிதம்பரம் பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ட்ராக்டரில் மாவட்டத் தலைநகர் (கடலூர்) நோக்கி பேரணி நடத்துவது என முடிவு செய்துள்ளனர்.