கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீரப்பாளையம் கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அதிகாரி விமலா தலைமை வகித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே. எஸ் அழகிரி, கட்சியின் மாநில நிர்வாகிகள் பாலச்சந்தர், சேரன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஒன்றிய செயலாளர் செம்மலர், கிராம பொதுமக்கள் அனைத்து கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான பொதுமக்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும் வலியுறுத்திப் பேசினார்கள். மேலும் இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைவரும் பொது சுகாதாரம் குறித்து உறுதிமொழி ஏற்றனர். ஊராட்சி செயலாளர் குமாரி நன்றி கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி இந்த பகுதியில் நிலத்தடி நீர் உப்பாக மாறி உள்ளது. இதனால் குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு பல்லாயிரம் கோடிகளை செலவு செய்து கழிவறையை கட்டுகிறது சரியான பராமரிப்பு இல்லாததால் அதனை தொடர்ந்து செயல்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
மக்களுக்கு சேவையாற்றும் கீழ்நிலை அதிகாரிகள் ஒரு திட்டத்திற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி வாங்க 15 நாட்கள் ஆகிறது. ஆகவே அவர்களுக்கு உடனடியாக முடிவு எடுத்து செயல்பட கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும். அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது கொடுமையிலும் கொடுமை அதிமுக அரசு பஞ்சாயத்துராஜ் சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறது. ஊராட்சிகளில் உள்ள பிரச்சனைகளை விரைவாக தீர்க்க உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.
இதே போன்று மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று தீர்மானம் இயற்றியுள்ளனர்.