Skip to main content

'பிரதமர் சொன்னால் அவரிடமே செல்லுங்கள்' - செவிட்டில் விட்ட உச்சநீதிமன்றம் 

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

nn

 

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் திட்டத்திற்கும், நியமனத்திற்கும் எதிராகப் பல்வேறு அமைப்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளையும் சேர்த்து உச்சநீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

 

இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ஆஜரான தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், ‘எதற்காக அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றுகிறீர்கள்’ எனத் தமிழக அரசு சார்பில் கண்டனம் தெரிவித்தார். ‘ஆகம விதிப்படி பயிற்சி பெற்றவர்கள் ஆகம விதியைப் பின்பற்றும் கோவில்களில் நியமிக்கப்படுகிறார்கள்’ எனத் தமிழக அரசு பதிலளித்தது. தொடர்ந்து  இது தமிழ்நாட்டைச் சேர்ந்த விவகாரம் என்பதால் சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

 

அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை தொடர்ந்த ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்க மனுதாரர் தரப்பு, 'தமிழ்நாட்டில் கோயில்களை மாநில அரசே கைப்பற்றி வருவதாக பிரதமர் கூறியுள்ளார்' எனத் தெரிவித்தனர். அதனைக் கேட்ட நீதிபதிகள், 'தமிழ்நாட்டில் கோயில்களை அரசு கைப்பற்றி வருவதாக பிரதமர் சொன்னால் பிரதமரிடமே செல்லுங்கள்' என கண்டனம் தெரிவித்ததோடு, அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடரும். அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழ்நாடு அரசின் ஆணைக்கு தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்து, வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரி 25 ஆம் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்