ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்று, ஆட்சியமைக்கவுள்ளது. நேற்று 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒருபுறம் கவனம் பெற்ற நிலையில், இந்திய தேர்தல் ஆணையரின் கருத்து ஒன்று மறுபுறம் கவனத்தைப் பெற்றிருந்தது.
மத்திய அரசு சார்பில் ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ரேஷன் கார்டு உள்ளிட்ட திட்டங்கள் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த நாங்கள் தயார் என இந்திய தேர்தல் ஆணைய தலைமை ஆணையர் சுசில் சந்திரா தெரிவித்திருந்தார். மேலும், இதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் என அரசியல் சாசனத்தில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு வாய்ப்பில்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கையில், ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்காது. அதற்கு வாய்ப்பில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் வரவேற்கத்தக்கது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த கடம்பூர் ராஜு ''ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் வரவேற்கத்தக்கது. இந்த திட்டத்தைப் பற்றி பிரதமர் மோடி கூறியிருந்தால் அது அரசியல் ரீதியாகப் பார்க்கப்படும். ஆனால் அதை நடைமுறைப்படுத்துகின்ற தேர்தல் ஆணையமே கூறியிருப்பது வரவேற்கக்கூடியது. 2021-ல் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தாலும் அதிமுக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை வரவேற்றிருக்கும்'' என்றார்.