வானொலி மூலம் இந்தியை திணிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்த அறிக்கையில், “காரைக்கால் வானொலி நிலையத்தின் பண்பலைவரிசையில் ஒலிபரப்பப்பட்டு வந்த தமிழ் நிகழ்ச்சிகளின் நேரத்தை குறைத்து விட்டு, தினமும் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. பிரசார் பாரதி நிறுவனத்தின் இந்த அப்பட்டமான இந்தித் திணிப்பு கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
மொழி பண்பாடு தொழில் ஆகியவற்றில் பண்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகளை வானொலி வயிலாக கொண்டு வருவது வேற்றுமையில் ஒற்றுமை காணும் தத்துவத்திற்கு எதிரான செயல்.
கல்வியில் தொடங்கி கலாச்சாரம் வரை அனைத்திலும் இந்தியை திணித்து வரும் மத்திய அரசு, இப்போது வானொலிகள் மூலமாகவும் இந்தியை திணிப்பது நியாயமற்றது. உள்ளூர் மக்களின் உணர்வுகளை மதித்து, அவர்கள் விரும்பும் நிகழ்ச்சிகளை வழங்குவது தான் பிரசார்பாரதியின் கடமை ஆகும். அதற்கு மாறாக விருப்பமற்ற நிகழ்ச்சிகளையும், மொழிகளையும் திணிக்கும் போது அது வெறுப்பை ஏற்படுத்தும். இதை உணர்ந்து கொண்டு காரைக்கால் வானொலியில் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதை நிறுத்தி விட்டு, வழக்கம் போல தமிழ் நிகழ்ச்சிகளையே ஒலிபரப்ப வேண்டும். தருமபுரி, நாகர்கோவில் போன்ற மற்ற நிலையங்களுக்கு இந்தி நிகழ்ச்சிகளை நீட்டிப்பதையும் பிரசார் பாரதி கைவிட வேண்டும். இல்லாவிட்டால் காரைக்கால் வானொலி நிலையம் முன், அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” என ராமதாஸ் கூறியுள்ளார்.