“பி.ஜி.ஆர். நிறுவன டெண்டர் முறைகேடு குறித்து ஒரு நபர் விசாரணை ஆணையம் நடத்த வேண்டும். செந்தில்பாலாஜியின் நடவடிக்கைக்காக காத்திருக்கிறேன் என்னை கைது செய்தாலும் பராவாயில்லை. திமுக ஆட்சி போல, பாஜகவும் ஆட்சியில் உள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “ஊழல் எப்படி நிகழ்த்த வேண்டும் என்பதை செந்தில் பாலாஜியைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். அவர் ஊழலின் தளபதியாக செயல்படுகிறார். செந்தில்பாலாஜி ஊழல்வாதி என ஸ்டாலினே கூறியுள்ளார். பி.ஜி.ஆர். நிறுவனத்தின் தகுதி தெரியாமல் டெண்டர் வழங்கியிருப்பதால் திமுக அரசு கார்ப்பரேட் அரசாக செயல்படுகிறது. கோபாலபுரம் குடும்பத்தினர் அனைத்து துறைகளிலும் தலையிட தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் விரைவில் மிகப்பெரிய மின்வெட்டு தொடங்கும். அதற்கான அச்சாரமாகத்தான் பி.ஜி.ஆர். நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கியுள்ளனர்.
செந்தில் பாலாஜி, பி.ஜி.ஆர். நிறுவனத்தின் ஊழியராகப் பேசுவதைவிட தமிழகத்தின் அமைச்சராகப் பேச வேண்டும். டான்ஜெட்கோ நிராகரித்த நிறுவனத்திற்கு மீண்டும் டெண்டர் அனுமதி வழங்கியது ஏன்? 4,472 கோடி ரூபாய்க்கு விதாண்டவாதமாக பி.ஜி.ஆர். நிறுவனத்திற்கு டெண்டரை வழங்கியுள்ளனர். பி.ஜி.ஆர். நிறுவனத்தின் டெண்டர் முறைகேடு தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.
பி.ஜி.ஆர். நிறுவனம் 15ஆண்டு காலமாக அதிகாரத்தைத் தவறுதலாகப் பயன்படுத்தியுள்ளது குறித்து நிறுவனம் தொடங்கிய நாள் முதல் விசாரணை நடத்த வேண்டும். மின்சாரத்துறை அமைச்சர் தனது பதவியை முதலில் காப்பாற்றிக்கொள்ளட்டும். செந்தில் பாலாஜி என் மீது அவதூறு வழக்கை தொடர்ந்தாலும், காவல்துறையை வைத்து கைது செய்து சிறைக்கு அனுப்பினாலும் சந்திக்க தயார்.
சிறையில் இருந்து வந்து மீண்டும் திமுக அரசின் ஊழலை வெளிக்கொண்டுவருவேன். திமுக மட்டுமல்ல நாங்களும் ஆட்சியில் உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழகத்தில் பண அரசியல் செய்யலாம் என திமுக நினைக்கிறது. தமிழகத்தின் பிரச்சனையைப் பற்றி பாஜக மட்டும்தான் பேசுகிறது. பி.ஜி.ஆர். ஒப்பந்தம் குறித்தும் முதல்வர் மற்றும் செபிக்கு கடிதம் எழுதவுள்ளோம். பி.ஜி.ஆர். நிறுவனத்தின் மீது விசாரணை நடத்தினால் திமுக அரசை வெளிப்படையான அரசு என ஒத்துக்கொள்கிறேன். எந்தக் கட்சி ஊழல் செய்தாலும் அதனை வெளிக்கொண்டுவருவோம். கார்ப்பரேட் தான் ஊழலின் ஊற்றுக்கண்.
எம்.பி.தொகுதிகளின் வெற்றிகளை கார்ப்பரேட் நிறுவனம்தான் முடிவு செய்யும் நிலை உள்ளது. தமிழகத்தில் 20 சதவிதம் கப்பம் கட்டித்தான் நிறுவனம் அனுமதிபெறும் நிலை உள்ளது. ஊழல் செய்யும் எந்த நபர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதலமைச்சருக்கு ஊழல் நடைபெறுவது குறித்து தெரியப்படுத்த வேண்டும் என்பது நமது கடமை.
‘நமோ’ மொபைல் ஆப் என்பது மைக்ரோ டொனேசன் மூலமாக பாஜகவிற்கு நிதி செலுத்தலாம். ஸ்வட்ச் பாரத், தடுப்பூசி போன்ற சமூகப் பணிகளை மேற்கொள்கிறோம். நமோ ஆப்பிற்கும் மத்திய அரசிற்கும் சம்மந்தமே இல்லை. நமோ ஆப் மூலமாக பாஜகவினர் சேவை செய்த பின்னர் ஸ்டிக்கர் ஒட்டுகிறோம்” என்றார்.