கீரமங்கலம் பகுதியில் காய்ச்சல்
அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதி
கீரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், செரியலூர், கொத்தமங்கலம், சேந்தன்குடி, நகரம், குளமங்கலம், பனங்குளம், மேற்பனைக்காடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த பல நாட்களாக காய்ச்சலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 20 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொசு உற்பத்தியும் அதகமாக உள்ளதால் கடந்த 15 நாட்களாக காய்ச்சல் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அதிகமாக காய்ச்சல் உள்ளது.
காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முதல் கீரமங்கலத்தில் உள்ள தனியார் கிளினிக்களில் சிகிச்சை பெற்ற பலர் காய்ச்சல் குறையாத நிலையில் திருச்சி, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, மற்றும் பல ஊர்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் கீரமங்கலம் பகுதியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மட்டும் நடத்தப்பட்டது. ஆனால் காய்ச்சலைப் பரப்பு கொசுக்களை ஒழிக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர் பொதுமக்கள்.
- பகத்சிங்