Skip to main content

''திமுக இதை செய்துவிட்டால் எத்தனை விஜய் வந்தாலும்...''-திருமா பேச்சு

Published on 13/09/2024 | Edited on 13/09/2024
"If the DMK does this, no matter how much Vijay comes..." - Thiruma's speech

மதுவிலக்கு தொடர்பாக விசிக நடத்தும் மாநாட்டில் அதிமுகவினரும் பங்கேற்கலாம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார். திருமாவளவன் அதிமுகவிற்கு அழைப்பு விடுத்தது பேசுபொருளானது. இதற்கு கூட்டணியைச் சார்ந்தவர்கள், கூட்டணியைச் சாராதவர்கள் என பலரும் கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கட்டாயம் தமிழக அரசு மதுக் கடைகளை மூடும் என்ற நம்பிக்கையோடு களத்தில் நிற்க வேண்டும் என திருமாவளவன் பேசியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்பொழுது நிர்வாகிகள் மத்திய பேசிய அவர், ''கட்டாயம் மதுக்கடைகளை மூட முடியும் என்ற நம்பிக்கையோடு நாம் களத்தில் நிற்க வேண்டும். அதுதான் முக்கியம். ஏதோ நாம் தேர்தல் கணக்கிற்காக நிற்கிறோம், சீன் போடுகிறோம் என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

சொல்லிக் கொண்டிருப்பவர்கள் சொல்லிக் கொண்டிருக்கட்டும். அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. இதில் நாம் தெளிவாக இருக்கிறோம். உறுதியாக இருக்கிறோம். இந்த போராட்டத்தை முன்னெடுப்பதனால் எந்த விளைவுகள் நேர்ந்தாலும் அந்த விளைவுகளை எதிர் கொள்வதற்கு தயாராக இருக்கிறோம். அதுதான் முக்கியமானது. இதை உங்களுக்கு முதலில் நம்பிக்கையாக சொல்ல, நம்பிக்கையை பதிவு செய்ய விரும்புகிறேன். எங்களுக்கு மது விலக்கில் உடன்பாடு இருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் மதுவிலக்கை ஒத்துக்கொள்கிறார்கள். மதுவை ஒழிக்க வேண்டும் என ஒத்துக்கொள்கிறார்கள். பின்னர் ஏன் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறந்து இருக்கிறது. இதுதான் என்னுடைய கேள்வி.

தமிழ்நாட்டில் உள்ள எல்லா கட்சிகளும் மதுவிலக்கு வேண்டும் என சொல்கின்றன. பிறகு என்ன சிக்கல். எல்லாரும் ஒன்றாக சேர்ந்து ஏன் இதை ஒழிக்க முடியாது. பீகாரில் எப்படி அதனை நடைமுறைப்படுத்தினார்கள். குஜராத்தில் எப்படி மதுவிலக்கு நடைமுறைகள் இருக்கிறது. மிசோரம் நாகாலாந்து என்கிற வடகிழக்கு மாநிலங்களில் எப்படி இது நடைமுறையில் இருக்கிறது. மிசோரம், நாகாலாந்து சின்ன மாநிலங்கள். பீகாரும், குஜராத்தும் பெரிய மாநிலங்கள், அங்கே அவர்களால் நடைமுறைப்படுத்த முடிகிறது. இந்தியா முழுவதும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கு எல்லா மாநிலங்களும் முன்வர வேண்டும். அதனால் தான் தேசியக் கொள்கை வேண்டும் என சொல்கிறோம். இவர் திமுகவை சொல்வதற்கு பயந்து கொண்டு அவர் பூசி மொழுகி தேசிய கொள்கை என்று திசைத் திருப்புகிறார் என்கிறார்கள். நாங்கள் சொல்வதை புரிந்து கொள்வதற்கும் கொஞ்சம் ஞானம் வேண்டும். அப்படித்தான் இதைச் சொல்லியாக வேண்டி இருக்கிறது. திமுகவிற்கு நான் சொல்கிறேன் நீங்கள் மட்டும் இந்த தேர்தலுக்கு முன்னால் அரசு மதுபான கடைகளை மூடிவிட்டால் எத்தனை விஜய் வந்தாலும் திமுக தான் வெற்றி பெறும்'' என்றார்.

சார்ந்த செய்திகள்