உதகை அருகே உள்ள நடுட்டம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் வழியில் உள்ள டெர்ரஸ்டேட் செல்லும் பாதையில் தலித் மக்களுக்கான 350க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்திற்கு அரசு பட்டா வழங்கியுள்ளது. இந்தப் பட்டா நிலத்தில் மக்கள் செல்வதற்கு பொது பாதை இருந்து வந்துள்ளது. அந்தப் பாதையில் மக்கள் சென்று தங்களுடைய விவசாயத்தையும் பார்த்து வந்தனர்.
இந்த நிலையில், சிலர் விவசாயம் செய்து போதிய லாபாம் ஈட்ட முடியாத சூழ்நிலையால் நிலத்தின் பட்டாவை வைத்து கடன்பெற்று விவசாயம் செய்தனர். அதில் மேலும் நஷ்டம் அடைந்து, கடன் தொல்லையால் அந்த இடங்களை கடன் வாங்கியவர்களிடமே விட்டுச் சென்றுள்ளனர். அதைப் பயன்படுத்தி இதையே கூட்டு பட்டா பெயரில் அந்த இடத்தை தாசில்தார் உதவியால் பெரும் முதலைகளின் பெயரில் மாற்றப்படுகிறது. இப்படி அடுத்தடுத்து இதே பாணியில், மீதமுள்ள இந்த மக்களை விரட்டி அடிக்கவே, முதலில் அந்தப் பகுதிக்குச் செல்லும் பேருந்தை போதிய வருமானம் வரவில்லை என்று நிறுத்தியுள்ளனர்.
அதேபோல பொது சாலையை அங்குள்ள வனத்துறை அதிகாரிகள் உதவியுடன், சாலையில் ஆணியைப் பதித்து யாரும் செல்லமுடியாத அளவிற்கு, இந்த இடம் வனத்துறைக்கு சொந்தமானது என பிரச்சினை செய்து வந்துள்ளனர். இது தொடர்பாக பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் போராட்டங்கள் செய்தும் இதுவரையிலும் எந்தப் பயனும் இல்லை என்கிறார்கள் அப்பகுதி மக்கள். இது தொடர்பாக உதகை விவசாய சங்கச் செயலாளர் கிருஷ்ணன் கூறுகையில், “எங்கள் இடத்தை அபகரிக்கவே இந்தச் சாலையை வனத்துறைக்குச் சொந்தமானது என பிரச்சினை செய்து எங்களை நிலத்திற்குச் செல்லவிடாமல் அடிப்பது, மரங்களை வெட்டிவிட்டோம் என பொய் புகார் போடுவது, நிலத்தினுள் பம்பு செட்டுகளை உடைப்பது என அராஜகத்தின் உச்சத்திற்கு செல்கின்றனர் .
இதை மாவட்ட ஆட்சியரிடம் சொன்னால் கண்டுகொள்ளவதே இல்லை. இந்த சாலை ரெவூன்யூவுக்கு சொந்தமானது. ஆனால் வனப்பகுதிக்கு சொந்தம் என்று எந்த அரசு உத்தரவுமின்றி இவர்களே வைப்பது, இதைக் கேட்க வேண்டிய தாசில்தார், மாவட்ட ஆட்சியர் அனைவரும் வனத்துறைக்குத் துணை நின்று கூட்டுக் களவாணிகளாக இருக்கிறார்கள். அதிமுக ஆட்சியின் நிலைதான் இப்படி நடந்தது என்றால், திமுக ஆட்சிக்கு வந்தும் இதே அராஜகத்தையே செய்கின்றனர். இந்த அரசு எங்களுக்கு இந்தச் சாலையை பெற்றுத் தர வேண்டும்” என்றார். மேலும், “அந்த இடம் உண்மையிலே வனப் பகுதிக்கு சொந்தமானது என்றால், அந்த நிலத்திற்கான பாதை இல்லாமல் அரசு எப்படி இந்த மக்களுக்கு பட்டா நிலத்தைக் கொடுத்திருக்கும்.
அதே பாதையில் எப்படி அரசு பேருந்து சென்றிருக்க முடியும். அந்த மக்கள் எந்தப் பாதையில் சென்று விவசாயம் செய்திருக்க முடியும் என்ற கேள்வியை தாசில்தார் குப்புராஜிடம் முன்வைத்தோம். அதற்கு அவர், ‘நான் கரோனா பணியில் இருக்கிறேன். என்னால் பேச முடியாது’ என தொடர்பை துண்டித்துவிட்டார். மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் கேட்டபோது, ‘இது தொடர்பாக எந்தத் தகவலும் எனக்குத் தெரியவில்லை, இனி அதனை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று சாதாரணமாக கூறினார்" என கிருஷ்ணன் தெரிவித்தார்.