எதிர்வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை திமுக முன்னெடுத்து வருகிறது. இதற்காக அண்மையில் அதன் கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காணொளி வாயிலாக தொடங்கியுள்ளது.
இதில் மாவட்டச் செயலாளர்கள் 72 பேர் காணொளி வாயிலாக இணைந்துள்ளனர். அதேபோல் அமைச்சர்கள், தொகுதி பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டவர்களும் இந்த காணொளி கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் மண்டல வாரியாக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டங்கள் நடத்தி இருந்தார்.
இந்நிலையில் இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பொறுப்பாளர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை கொடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் தோற்றால் அந்த மாவட்டத்திற்கான மாவட்டச் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்படுவார். தொகுதிப் பார்வையாளர்களுக்கு சரியாக ஒத்துழைக்காத மாவட்டச் செயலாளர்களும் மாற்றப்படுவர். தேர்தல் பணியில் தொய்வு இருந்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன். அவர்கள் மூத்த நிர்வாகி, அமைச்சர் என யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன். திமுக கூட்டணியின் வேட்பாளர் தோல்வி அடைந்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன் என கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.