உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.