மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழா கொண்டாட்டம் சென்னை பெரம்பூர் பின்னி மில் பகுதியில் நடைபெற்றது. இதில் திமுக அமைச்சர்களும் தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடையில் பேசுகையில், ''அடிக்கடி மெரினாவிற்கு சென்று அவரது நினைவகத்தை வலம் வந்து கொண்டிருக்கிறேன். இந்த மேடையில் கலைஞர் அமர்ந்திருப்பதாகவே நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். நம்மைப் பொறுத்தவரை தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும், முத்தமிழ் அறிஞர் கலைஞரும், இனமான பேராசிரியரும் நம்மை நாள்தோறும் இயக்கக்கூடிய உணர்வுகள். அந்த உணர்வுகள் தான் அவர்களது மறைவிற்குப் பிறகு நமக்கு உயிரூட்டிக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் எங்களின் உணர்வே! எங்களின் உயிரே! எங்களின் எழுச்சியே! எங்களின் வழிகாட்டியே! எங்களின் கலங்கரை விளக்கமே! எங்களின் உதயசூரியனே! உங்களுடைய நூறாவது பிறந்த நாளை நாங்கள் கொண்டாடத் தொடங்குகிறோம். கலைஞரே நீங்கள் எப்பொழுதும் உடன்பிறப்புகளின் இடையில் தான் இருப்பீர்கள். உங்களின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளின் இடையில் தான் இந்த விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். கலைஞரே நீங்கள் எப்பொழுதும் கழகத்தின் பொதுச்செயலாளர், கழகப் பொருளாளர், கழகத்தின் முதன்மைச் செயலாளர், கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழகச் செயலாளர்கள் என அனைவரும் சூழ்ந்திருக்கத் தான் உங்களுடைய பிறந்த நாளை நீங்கள் கொண்டாடுவது வழக்கம். கலைஞரே நீங்கள் தோழமைக் கட்சிகளை தோளோடு தோள் சேர்த்துக் கொண்டுதான் வலம் வருவீர்கள். இதோ இந்த மேடையிலே ஆசிரியர் ஐயா உள்ளிட்ட தோழமை இயக்க தலைவர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.
இவர்களை எல்லாம் வைத்துக்கொண்டு உங்களது நூற்றாண்டு விழாவை நாங்கள் தொடங்குகிறோம். 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. அதே வட சென்னையில் உங்களது நூற்றாண்டு விழா தொடங்குகிறது. மிகப்பிரமாண்டமாக இதை நடத்திக் காட்டி இருக்கிறார் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் செயல் பாபு செயல் பாபு என்று என்னால் எப்பொழுதும் அழைக்கப்படக்கூடிய அமைச்சர் சேகர்பாபு. அவருக்கு தோளோடு தோள் நின்று இந்த மாவட்டத்தில் இந்த பகுதியில் பணியாற்றி இருக்கக்கூடிய செயல்வீரர்கள் அத்தனை பேருக்கும் தலைமைக் கழகத்தின் சார்பில் எனது தனிப்பட்ட இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி சென்னை மெரினாவில் அவரது நினைவிடம் திறக்கப்படும். 95 ஆண்டுகள் வாழ்ந்த கலைஞர் மேலும் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் விழா நாயகனாக இருந்திருப்பார்'' என்றார்.