சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனின் சொந்தத் தொகுதியான புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியின் அருகில் உள்ள கீரமங்கலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் மெய்யநாதன் அங்கிருந்தவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். இதன் பின் பச்சைக் கொடி அசைத்து போட்டிகளை துவக்கிவைத்தார். விழாவில் பேசிய அவர், “விழிப்புணர்வுகளை ஏற்படுத்த பல வழிகள் உள்ளது. அதில் ஒன்று தான் மாரத்தான். மாரத்தான் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது தங்கள் உடல் நலம் காக்கப்படுவதுடன் பொதுமக்களின் பார்வையும் திரும்புகிறது. அதனால் தான் மாரத்தான் விழிப்புணர்வு சிறப்பாக உள்ளது” என்றார்.
இந்த மாரத்தான் நிகழ்வில் 7 வயது சிறுவர்கள் மித்ரன், குணநகுலன் என ஏராளமான சிறுவர் சிறுமிகள் முதன்முறையாக கலந்து கொண்டு 21 கிமீ மற்றும் 10 கிமீ தூரத்தை முழுமையாக கடந்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றனர்.
அதே போல பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயது கலைச்செல்வன் என்ற ஒரு கையை இழந்த இளைஞர்கள் 21 கி மீ தூரத்தையும் முழுமையாக ஓடிவந்தார். அவர் கூறும் போது.. “1999 ல் ஒரு விபத்தில் என் ஒரு கை அகற்றப்பட்டது. 2000 மாவது ஆண்டு முதல் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தொடங்கினேன். 40 வயதுக்குள் 400 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று முடிவெடித்தேன். தற்போது 37 வயதிலேயே 400 மாரத்தான்களை கடந்து இன்று கீரமங்கலத்தில் 401 வது மாரத்தானில் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்த போட்டியில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது.
இதுவரை 150 க்கும் மேற்பட்ட மெடல் அடித்த நான் ஒலிம்பிக் வரை போய் வந்துட்டேன். ஓட்டப்பந்தயம், சைக்கிள் பந்தயம், கபடி, நீச்சல், வாலிபால், 20 ந் தேதி ஆசிய சைக்கிள் போட்டிக்கு போறேன் அதில் வெற்றி பெற்று ஒலிம்பிக் போக முயற்சி செய்றேன். மாற்றுத்திறனாளிகள் என்று யாரையும் முடக்கிவிடாதிங்க அவர்களுக்காக எத்தனையோ விளையாட்டுகள் உள்ளது. மாற்றுத் திறனாளிகளே மாற்றம் தருவோம் வெளியே வாருங்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கே அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொள்கிறேன்” என்றார்.