சென்னை திருநின்றவூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பள்ளித் தாளாளர் வினோத் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் திருநின்றவூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
திருநின்றவூர் காவல்துறையினர் மாணவியின் பெற்றோர் அளித்த புகாரை ஏற்காததால் நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமறைவான பள்ளித் தாளளர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பெற்றோர் மற்றும் மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கும் தன் மீது வைத்த குற்றச்சாட்டிற்கும் விளக்கமளித்து பள்ளித் தாளாளர் வினோத் பேசியுள்ள வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “உண்மை என்னவென்று தெரிந்து கொண்டு பேச வேண்டும். உண்மை என்ன என்று தெரியாமல் பேசுவதில் நியாயமில்லை. நீங்கள் நம்ப மாட்டீர்கள். 15 ஆம் தேதி என் மேல் குறை சொல்லும்போதே எலி மருந்து சாப்பிட்டுவிட்டேன். இதுவரை நான் சாகவில்லை. ஏனென்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. இரண்டு நாள் கழித்து மறுமுறையும் சாப்பிட்டேன். அதுவும் ஒன்றும் செய்யவில்லை. நான் என்ன ஆவேன் என்று எனக்குத் தெரியவில்லை.
இப்பொழுதே ஒன்று குடித்து முடித்துவிட்டேன். மற்றொன்றை குடித்துக் கொண்டிருக்கிறேன். நடிப்பு ஒன்றும் இல்லை. ஒவ்வொரு முறையும் பாலியல் ரீதியாக ஒருவரை முடக்க முடியுமானால் அது தவறு. நேர்மையாக குழந்தைகளுக்காக எத்தனையோ ஆசிரியர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களுக்காக நான் சாகிறேன். ஒரு ஆசிரியர் தன் சுயநலத்திற்காக இவ்வாறு செய்ய முடியுமானால் அது நியாயமில்லை. இது என்னுடைய மரண வாக்குமூலம்” எனக் கூறினார்.
வீடியோ காட்சி பதிவின் போதும் பள்ளி தாளாளர் விஷம் அருந்தியது அதில் பதிவாகியுள்ளது.