Skip to main content

’அமைச்சர் தங்கமணி மீது  நான் வழக்கு தொடர்வேன்!’ மு.க.ஸ்டாலின் பேட்டி

Published on 21/09/2018 | Edited on 21/09/2018

 

students

 

இன்று (21-09-2018) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடத்தில் பேசிய விவரம் பின்வருமாறு:
 

செய்தியாளர்: நீங்கள் தொடர்ந்து தவறான தகவல்கள் கூறி வருவதாக மின்சாரத் துறை அமைச்சர் உங்கள் மீது குற்றம் சாட்டியுள்ளாரே?
 

ஸ்டாலின்: இரண்டு நாட்களுக்கு முன்பு காற்றாலை மின்சாரத்தில் முறைகேடாக பலகோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்று ஒரு நீண்ட அறிக்கையை நான் வெளியிட்டேன். அதற்குரிய விளக்கத்தை, மின்துறை அமைச்சர் தங்கமணி அவர்கள் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், எந்தவொரு விளக்கத்தையும் சொல்ல முன்வராமல், “அபாண்டமான, அவதூறான ஒரு பொய்யான குற்றச்சாட்டை எதிர்க்கட்சித் தலைவர் என் மீது சொல்லியிருக்கிறார், அவர் சொல்லக்கூடிய குற்றச்சாட்டுக்கு ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால் சொல்லட்டும்” என்று சொல்லி, என் மீது சட்டப்படி வழக்கு போடப் போகிறேன் என எச்சரிக்கும் விதத்தில் ஒரு பதிலை தந்திருக்கிறார்.

ஆனால், நேற்று இரவு இதோ என் கையில் இருக்கும் இந்த முழுமையான ஆதாரத்தை வெளியிட்டு இதுகுறித்து உடனே விசாரணை நடத்திட வேண்டுமென்று நான் கூறியிருக்கிறேன்.

ஏற்கனவே, குட்கா பிரச்சனையில், முதன்முதலாக நாங்கள் சட்டமன்றத்தில் எழுப்பி இதுகுறித்து விசாரணை நடத்திட வேண்டும் என்றும், சம்மந்தப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் நான் தெளிவாக எடுத்துச்சொல்லியிருந்தேன்.

 ஆனால், “எதிர்க்கட்சித் தலைவர் சொல்லியிருப்பது போல் எந்தவித தவறும் நடைபெறவில்லை. எனவே, தவறான கருத்தை சொல்லியிருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர் மீது நான் வழக்கு போடுவேன்” என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் ஏற்கனவே சொல்லியிருந்தார்கள். ஆனால், இதுவரையில் என்மீது வழக்கு போடவில்லை.
 
நாங்கள் தான் குட்கா ஊழல் தொடர்பாக நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு போட்டோம். தற்போது, குட்கா ஊழல் பிரச்சனை சி.பி.ஐ விசாரணையில் இருக்கிறதென்பது நாட்டிற்கு நன்றாக தெரியும். எனவே, மின்துறை அமைச்சராக இருக்கக்கூடிய தங்கமணி அவர்களை நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, காற்றாலை முறைகேடு தொடர்பான ஆதாரத்தை வெளியிட்டிருக்கிறேன். இப்பொழுதாவது, அவர் சொன்னபடி என்மீது வழக்கு போடவேண்டும். ஒரு வார காலம் நான் காத்திருப்பேன். அந்த ஒரு வார காலத்திற்குள் அவர் என்மீது வழக்குப் போடவில்லை என்று சொன்னால், நான் அவர் மீது வழக்குப் பதிவு செய்து, எப்படி குட்கா ஊழல் பிரச்சனை சி.பி.ஐ வரை சென்று வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கிறதோ அதுபோல், இதையும் கொண்டு சென்று இந்த ஊழல் பிரச்சனைக்கு நல்லதொரு பரிகாரத்தை நான் நிச்சயமாக காண்பேன்.
 
என்மீது, வழக்கு போடுவேன் என்று சொன்ன தங்கமணி அவர்கள் உடனடியாக வழக்கு போட தயாரா? என்ற அந்தக் கேள்வியை மாத்திரம் கேட்டு இந்த விளக்கத்தை நான் உங்கள் மூலமாக அவருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

செய்தியாளர்: தி.மு.கழகத்திற்கு எதிராக அ.தி.மு.க நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து உங்களின் கருத்து?

 
ஸ்டாலின்: அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டிற்கு எங்கள் கழகத்தின் செய்தி தொடர்புச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்  நீண்ட விளக்கத்தை தந்திருக்கிறார். அந்த பதிலே, போதுமானது.


 

செய்தியாளர்: தமிழகத்தில் பெண்கள் மீது தொடர்ந்து பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. நேற்றைய தினம் சிறைச்சாலையில் டி.ஐ.ஜி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கூட சோதனை நடத்தியிருக்கிறார்களே?

ஸ்டாலின்: இந்த ஆட்சியில் டி.ஜி.பி அலுவலகத்தில் சோதனை நடந்துள்ளது. தலைமை செயலாளர், அமைச்சருடைய வீடுகளில் சோதனை நடந்துள்ளது. அதையெல்லாம், வேடிக்கை பார்த்துவிட்டு, இன்னும் வெட்கம் மானமில்லாமல் இன்னும் அந்தப் பதவிகளில் ஆட்சியாளர்கள் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இது தான் இன்றைய நிலை. அதனால் தான், நாங்கள் சேலத்தில் மட்டுமில்லாமல் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தி எல்லாவற்றையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறோம்.

 
அதுமட்டுமில்லாமல், வருகின்ற 3 மற்றும் 4 ஆகிய இரண்டு நாட்களில் ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள எல்லா நகராட்சிகளிலும் அ.தி.மு.க அரசு ஈடுபட்டிருக்கக் கூடிய கலெக்க்ஷன், கமிஷன், கரப்ஷன் பற்றி விளக்கி சொல்லக்கூடிய அளவிற்கு தொடர்ந்து கூட்டங்கள் நடத்துவதற்கு தி.மு.கழகத்தின் சார்பில் முடிவெடுத்துள்ளோம்.

 

சார்ந்த செய்திகள்