அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ளது முட்டுவாஞ்சேரி. இந்த ஊரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் 30 வயது ரகுபாலன். இவர் சென்னையில் வேலை செய்து கொண்டிருந்தார். கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக சொந்த ஊருக்கு வந்து தங்கியுள்ளார். இவர்களுக்கு சொந்தமான வயலில் மின்சார மோட்டார் ஒன்று இயங்கி வருகிறது. அதற்கு செல்லும் மின்சார லைனில் உரசியபடி மரக்கிளைகள் நீண்டு வளர்ந்து வந்துள்ளன. இதனால் பம்பு செட்டுக்கு செல்லும் மின்சாரம் அடிக்கடி தடைபட்டுள்ளது. இதற்காக ரகுபாலன் மின்சார லைனை உரசி செல்லும் மரக்கிளைகளை அப்புறப்படுத்த முடிவு செய்தார்.
அதன்படி மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ரகுபாலன் வெட்டிய மரக்கிளை ஒன்று மின்சார லைனில் விழுந்துள்ளது. அப்போது மின்சாரம் தாக்கியுள்ளது ரகு பாலன் மேலே தொங்கியபடியே உயிரிழந்துள்ளார். இந்த தகவல் விக்கிரமங்கலம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரகு பாலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ரகு பாலன் மின்சார லைனில் உரசி சென்ற மரக்கிளைகளை அப்புறப்படுத்தும்போது அருகிலுள்ள டிரான்ஸ்பார்மரை நிறுத்தி விட்டு பாதுகாப்பாக மரக்கிளைகளை அப்புறப்படுத்தாமல் டிரான்ஸ்பார்மரை நிறுத்தாமல் மரக்கிளைகளை வெட்டியதால் மின்சாரம் பாய்ந்து இறந்தாரா? எப்படி நேர்ந்தது இந்த விபத்து என்கிறார்கள் என்று விசாரணை செய்து வருகிறார்கள் மின்சார வாரிய அதிகாரிகள்.
மேலும் மின்சார வாரிய ஊழியர்கள் மின்சாரம் செல்லும் பாதையில் இடையூறாக இருக்கும் மரங்களையும் அதன் கிளைகளையும் அவ்வப்போது அப்புறப்படுத்தி இருக்க வேண்டும். அவர்கள் காலதாமதம் செய்வதால் விவசாயிகளும் அவர்கள் வீட்டுப் பிள்ளைகளும் விவசாயம் பாதிக்கக்கூடாது என்பதற்காக அவர்களே முன்சென்று மின்சார ஊழியர்கள் செய்ய வேண்டிய இதுபோன்ற படிமை பணியை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
மின்சார வாரிய ஊழியர்கள் அலட்சியப் போக்கினால்தான் இதுபோன்று உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மாதத்தில் ஒரு நாள் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு நாள் முழுவதும் மின்சாரத்தை நிறுத்திவிட்டு மின் பாதைகளை சரி செய்வதாக கூறுகிறார்கள். ஆனால் அது கண்துடைப்பு பணிகளாக உள்ளன. இனியாவது மின்சார வாரிய அதிகாரிகள் ஒவ்வொரு பகுதியிலும் மின்சார பாதையில் இருக்கும் மரங்களை அதன் கிளைகளை அப்புறப்படுத்தி விவசாயிகளுக்கு வீடுகளுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்குவதோடு விவசாயிகளையும் அவர்களின் வீட்டுப் பிள்ளைகளின் உயிரையும் பாதுகாக்க வேண்டும் என்கிறார்கள் ஊர்மக்கள். இந்த சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.