மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் மேல்நிலைப் பள்ளியில் இன்று முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளியின் முன்னாள் மாணவர் என்ற முறையில் கலந்து கொண்டார். நிகழ்வின் மேடையில் பேசிய தமிழக முதல்வர், ''மாணவப் பருவம் என்பது யாருக்கும் கிடைக்காத காலம். இந்த மாதிரியான பள்ளிக் காலத்தில்தான் நாம் மகிழ்ச்சியோடு இருந்தோம். அத்தகைய பள்ளிக்காலத்தில் எப்படி எல்லாம் துள்ளித் திரிந்தோம் என்பதை எல்லாம் நான் நினைத்து நினைத்துப் பார்த்தேன்.
இந்தப் பள்ளியில் நான் படித்த பொழுது நமது தமிழாசிரியர் ஜெயராமன் சொன்னதுபோல் என்னுடைய அப்பா அன்றைக்குப் போக்குவரத்துத் துறையின் அமைச்சராக இருந்தார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகுதான் முதலமைச்சராக வருகிறார். போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது நான் எந்த பந்தாவும் இல்லாமல் ஒரு அமைச்சருடைய மகனாக நடந்து கொள்ளவில்லை. நான் மட்டுமல்ல நான் அப்படி நடந்து கொள்வதை என்னுடைய தலைவர், என்னுடைய தந்தை கலைஞரும் விரும்பமாட்டார். இதெல்லாம் என்னுடன் படித்தவர்களுக்குத் தெரியும். என்னுடைய ஆசிரியர்களுக்கு இது தெரிந்திருக்கிறது என்றால் என் கூட படித்தவர்களுக்கும் இது தெரியும்.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நான் கோபாலபுரத்தில் இருந்தபோது அமைச்சரின் மகனாக இருந்தும் பள்ளிக்கூடத்திற்கு பேருந்தில்தான் வருவேன். சில நேரங்களில் சைக்கிளில் வந்திருக்கிறேன். வீட்டிலிருந்து ஸ்டெல்லா மேரிஸ் காலேஜ் வரை நடந்து வந்து பல்லவன் போக்குவரத்து கழகத்தின் '29 சி' என்ற பேருந்தைப் பிடித்து அந்த பஸ்ஸில் ஏறி ஸ்டெர்லிங் ரோட்டில் வந்து இறங்கி, அங்கிருந்து மூன்று, நான்கு கிலோமீட்டர் நடந்துதான் பள்ளிக்கு வருவேன். நடந்து வருவதற்குப் பல காரணங்கள் உண்டு அதெல்லாம் இப்பொழுது சொல்ல முடியாது. அதெல்லாம் பழைய நினைவுகள். அப்படித்தான் இந்த பள்ளிக்கூடத்துக்கு நான் வந்து சென்றேன். அதுதான் என்னுடைய உண்மையான இயல்பு. அதே மாதிரி தான் இப்பொழுதும் இங்கே நான் முதல்வராக வரவில்லை என்று சொன்னேன்.
உங்கள் நண்பராகத்தான் வந்திருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் எனக்கு இந்த செக்யூரிட்டி போன்ற பாதுக்காப்பு முறைகள் எல்லாம் இல்லை என்றால், அவர்கள் ஒத்துக் கொண்டால் நிச்சயமாக நான் பஸ் அல்லது சைக்கிளில்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கணும். ஆனால் செக்யூரிட்டி விட மாட்டாங்க. அது உங்களுக்குத் தெரியும். மகிழ்ச்சியுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் நான் பெருமைப்படுகிறேன்'' என்றார்.