Skip to main content

''எப்போதும் அப்படியே தான் இருப்பேன்''-சர்ச்சைப் பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் பாக்யராஜ்!

Published on 20/04/2022 | Edited on 20/04/2022

 

'' I will always be that way '' - Bhagyaraj apologizes for controversial speech!

 

'பாரதப்பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் புதிய இந்தியா-2022' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் இன்று சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குநர் கே.பாக்யராஜ் பேசுகையில் ''பிரதமர் மோடியை விமர்சனம் செய்ய எப்போதும் ஆட்கள் தயாராக உள்ளனர். பிரதமர் மோடியை விமர்சிப்பவர்களை மூன்று மாதம் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்துக்கொள்ளுங்கள். ஏன் மூன்றுமாதக் குறைப்பிரசவ குழந்தை என சொல்கிறேன் என்றால் நான்காவது மாதம்தான் வாய் உருவாகிறது. ஐந்தாவது மாதம் காது உருவாகிறது. இதனால் மூன்று மாதத்தில் பிறந்த குழந்தைபோல சிலபேர் அவனும் நல்லா வாய் பேச மாட்டான் எவனாவது சொன்னால் காது கொடுத்தும் கேட்க மாட்டான். இப்படி தப்புத்தப்பா விமர்சனம் செய்கிறவன என்ன நினைக்கணும் அவனுக்கு இன்னும் வாயும் வரல, காதும் கேட்கலைன்னு நினைக்கணும்'' என்றார்.

 

கே.பாக்யராஜின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு இளையராஜா தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக எழுந்த சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில், தற்போது கே.பாக்யராஜ் தெரிவித்திருக்கும் கருத்து மனவளர்ச்சி குறைவர்களை அவமதிக்கும் வகையில் உள்ளதாக சர்ச்சை கிளப்பியுள்ளது. இந்நிலையில் 'டிசம்பர் 3' இயக்கத்தினுடைய தலைவர், பேராசிரியர் தீபக்நாதன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 'அரசியலில் உங்கள் எதிரிகளை விமர்சிக்க ஏன் ஊனத்தை கையிலெடுக்கிறீர்கள்? Why do you want to denigrate disability? நாங்கள் இயற்கையின் அங்கமில்லையா?  எங்களுக்கும் மான உணர்ச்சி உண்டு ஐயா! தொடர்ந்து அரசியல்வாதிகள் புண்படுத்துகிறார்கள். Respect psychosocial disabilities!

 

மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வலி  அக்குழந்தைகளின் பெற்றோர் வலி தெரியுமா நடிகர் பாக்கியராஜ் அவர்களே? அரசியல் எதிரிகளை விமர்சிப்பவர்கள், குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று நீங்கள் சொல்வது ஊனமுற்றோரின் இயலாமையை கைக்கொண்டு அதைக் குறைத்து பேசி, அரசியல் ஆதாயம் காணும் முயற்சி' என தெரிவித்துள்ளார்.

 

BAGYARAJ

 

இந்நிலையில் ''மாற்றுத்திறனாளிகளை அக்கறையுடனே பார்க்கிறேன்; எப்பொழுது அப்படியேதான் இருப்பேன். நான் திராவிட இயக்க தலைவர்களை பார்த்து வளர்ந்தவன். நான் பாஜக இல்லை. என்னுடைய சினிமாவிலும் திரவிட இயக்க தலைவர்களின் கருத்துக்கள் இருக்கும் அது தொடரும் நான் பேசியது யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. ஒரு மாதம், இரு மாதம் முன்பே பிறக்கும் குழந்தைகளை குறைப்பிரசவம் என்பார்கள். ஆனால் குறை இருக்காது'' என இயக்குநர் பாக்யராஜ் தனது பேச்சுக்கு வீடியோ வாயிலாக மன்னிப்பு கோரியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்