தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், கடந்த வாரம் பஞ்சாப் ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து, தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நாகலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார். இதனையடுத்து இன்று (18.09.2021) காலை அவர் தலைமை நீதிபதி முன்பு தமிழ்நாடு ஆளுநராக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, பொன்முடி, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு தொடர்பாகவும், ஆளுநர் அதிகாரம் தொடர்பாகவும் பேசினார். அவர் பேசும்போது, "தமிழகத்துக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டதை நினைத்து பெருமைப்படுகிறேன். பழம்பெருமை, நீண்ட கலாச்சாரம் கொண்ட தமிழ்நாட்டுக்கும், மக்களுக்கும் என்னால் இயன்ற அளவு உழைப்பேன்" என்றார். மேலும், ‘நீங்கள் ஆளுநராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தமிழ்நாட்டில் பல்வேறு கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள். அதிகார தோரணையில் நீங்கள் செயல்பட வாய்ப்பிருக்கிறது என்றெல்லாம் பேசப்பட்டதே’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அதற்குப் பதிலளித்த அவர், "ஆளுநர் பதிவி சட்டத்திற்கு உட்பட்டது. எனவே அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு என்னுடைய செயல்பாடுகள் அமைந்திருக்கும்" என்றார்.