கடந்த ஆண்டு ஜூன் மாதம் எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய ராணுவம் - சீன ராணுவம் இடையேயான மோதலில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனி என்பவர் வீரமரணம் அடைந்தார். இந்த நிலையில் இன்று தமிழக பாஜக தலைமையகத்தில் அண்ணாமலை முன்னிலையில் சென்னையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான கணபதி சுப்பிரமணியம், மறைந்த ராணுவ வீரர் பழனியின் மனைவி வானதியிடம் ஒரு கிரவுண்ட் வீட்டுமனையை வழங்கினார். மேலும் தனது கணவர் பழனியின் உருவச்சிலையைச் சீதக்காதி ஸ்டேடியத்தில் நிறுவ வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
அவரது கோரிக்கையை ஏற்றுப் பேசிய அண்ணாமலை, இந்த விஷயத்தில் அரசியலை உட்புகுத்தாமல் நிச்சயமாகப் பழனியின் உருவச்சிலையை நிறுவாமல் ஓய மாட்டோம் என உறுதியளித்தார். அதன் பின்பு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய மறைந்த ராணுவ வீரரின் மனைவி கூறியதாவது, “என் கணவர் என்னைத் தனியாக விட்டுப் போகவில்லை; எல்லாரும் இருக்காங்க என்பதை ஒரு உணர்வுப் பூர்வமாக நான் பார்க்கிறேன். யாரென்றே தெரியாத ஒருவர் ஒரு சொந்தமா அப்பாவா, அம்மாவா நான் இருக்கேன் என்று பக்கத்தில் இருப்பது ஒரு மிகப் பெரிய செயல். இந்த சமூகத்தில் தொடர்ந்து வாழ முடியுமா என்பதை நினைத்து அவர் இறந்தபொழுது ரொம்ப பயந்தேன், ஆனால் அதன்பின்பு நிறைய நல்ல விஷயங்களை பார்த்துக்கொண்டு இருக்கிறேன் நான்.
ஒரு ஆட்டோகாரங்ககூட பழனி அண்ண பேமிலி பார்த்துக்கொண்டுபோய் இறக்கி விட்டு வாங்கனு சொல்றாங்க. இந்த மக்கள் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் கணவர் இருந்தா என்ன பாதுகாப்பு, அரவணைப்பு கொடுப்பாரோ அதை மக்களிடம் நான் பார்க்கிறேன். அதைப் பார்ப்பதோடு மட்டுமின்றி உணர்வுப்பூர்வமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் இந்த விஷயத்திற்காகக் கணபதி சுப்பிரமணியம் அப்பாவிற்கு உண்மையாகவே ரொம்ப நன்றி கடன்பட்டிருக்கிறேன். இதனை நான் என் கணவருக்குக் கிடைத்த பெரிய மரியாதையாகத் தான் நினைச்சிட்டு இருக்கேன். இப்ப என் பையன் ஆர்மிக்கு போவேன்னு சொல்றான், ஆனால் தமிழ்நாட்டில் இருந்து நிறைய பேர் போகனும் அதற்கு இதெல்லாம் மிகப் பெரிய வழிகாட்டியா இருக்கும் என நம்புறேன்” எனத் தெரிவித்தார்.