இந்த கொடிய கரோனா காலம் வேலை இழப்புகளை ஏற்படுத்தியதால், தனிமனித பொருளாதார தேவை வேறு வழியில்லாமல் அவனை குற்றச் செயல் செய்யும் எல்லைக்கும் கொண்டு போகிறது என்பதை இந்த சம்பவம் மூலம் அறியலாம்,
ஈரோட்டில் நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஒரு இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு பெருந்துறை ரோடு, சங்கு நகர் பிரிவு அருகே எச்டிஎஃப்சி என்ற தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் செயல்படுகிறது. அந்த ஏடிஎம் அறையில் காவலாளி இல்லை. அங்கு பொருத்தப்பட்டிருக்கிற சிசிடிவி கேமரா மூலமே அந்த ஏடிஎம் கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் அந்த ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த ஒரு நபர் ஏடிஎம்மில் இருந்து பணம் வரும் அந்த முகப்பு பகுதியை உடைத்து உள்ளேே இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க முயன்றிருக்கிறார்.
ஆனால் ஏடிஎம் இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு வசதி மூலம், வங்கி ஊழியர்களுக்கு அலர்ட் மெசேஜ் செல்போன் மூலம் சென்றது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வங்கி ஊழியரான ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த சுரேஷ் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து, ஏடிஎம் மையம் அமைந்துள்ள ஈரோடு தெற்கு போலீஸ் ஸ்டேஷன் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த தகவலின் பேரில், போலீசார் சம்மந்தப்பட்ட ஏடிஎம் மையத்திற்கு விரைந்து சென்று ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த இளைஞரை, கையும் களவுமாக பிடித்தனர். இதனால் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பல ஆயிரம் ரூபாய் கொள்ளை போகாமல் தப்பியது. அந்த நபரை போலீசார் ஸ்டேஷன் கொண்டு சென்று நடத்திய விசாரணையில், அவர் ஈரோடு திண்டல் வள்ளியம்மை நகரை சேர்ந்த தங்கராஜ் மகன் கார்த்தி என்பது தெரிய வந்தது. "எதற்காக கொள்ளை முயற்சியில் ஈடுபட்டாய்?" என போலீஸ் விசாரிக்க அந்த இளைஞனான கார்த்தி, "நான் கார் டிரைைவர், ஏற்கனவே தொடர்ந்து வேலை கிடைக்காமல் ஆக்டிங் டிரைவராக யார் கூப்பிட்டாலும் கார் ஒட்டப் போவேன். அப்படி கிடைக்கும் வருவாயை வைத்துதான் குடும்பம் நடத்தினேன். கரோனா வந்த பிறகு ஒரு வேலையும் கிடைக்கவில்லை. பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானேன். வேறு வழியில்லாமல்தான் திருட முடிவு செய்தேன். மற்றவர் பொருளையோ, பணத்தையோ வீடு புகுந்து திருடக்கூடாது என முடிவு செய்து பேங்க் பணம், அரசாங்க பணம்தானே அதை எடுக்கலாம் என இந்தச் செயலில் இறங்கினேன்..." என பரிதாபமாக கூறிியிருக்கிறார். அதற்காக போலீசார் பரிதாபப்படவா முடியும்? அவரை கைது செய்து, சிறையில் அடைத்து விட்டார்கள். கரோனா கால கொடுமைகள் இப்படியெல்லாம் மனிதர்களை கொண்டு செல்கிறது.