சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் என்ற கல்லூரி இளைஞர் 2015 ஆம் ஆண்டு ஆணவப் படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தையே உலுக்கி இருந்தது. இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் மேல்முறையீட்டு வழக்கில் மீண்டும் இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து உயிரிழந்த இளைஞர் கோகுல்ராஜின் தாயார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''ஒன்னும் அறியாத சின்ன பையன். சின்ன வயசிலேயே என்னுடைய கணவர் இறந்துட்டாரு. பசங்க ரெண்டு பேத்தையும் இங்கிலீஷ் மீடியம் படிக்க வைத்தேன். என் வீட்டுக்காரர் பத்தாவது படிச்சிருந்தார். நான் அஞ்சாவது வரைக்கும் தான் படிச்சிருக்கேன். என்னோட பசங்களுக்கு ஷூ போட்டு பாக்கணும்னு ஆசைப்பட்டேன். அந்த மாதிரி பிள்ளையை கூட்டிட்டு போயி கொலை செய்திருக்கிறார்கள். இதற்கு யார் யார் உடன்பட்டாங்களோ அவங்களுக்கு தண்டனை நிச்சயமா கிடைக்கும். அர்த்தநாரீஸ்வரர் கொடுப்பாரு.
என் பையனை சித்திரவதைக்கு ஆளாக்கி தலையை துண்டித்திருக்கிறார்கள். அப்படி என்ன என் பையன் தப்பு பண்ணுனான். எவ்வளவு கொடூரமா தப்பு பண்றவங்க எல்லாத்தையும் விட்டுட்டு அறியா குழந்தையை, பச்சமண்ண போய் ஆள் வச்சு கொல்ற அளவுக்கு அப்படி என்ன வெறி. அவன் என்ன தப்பு செஞ்சான். அதனால அந்த தண்டனை நிச்சயமாக கிடைத்ததற்கு நான் நன்றி சொல்றேன். நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், ரமேஷ் ஐயாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பத்திரிகையாளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வழக்கிற்காக போராடிய திருமாவளவன் அண்ணனுக்கு நன்றி. ப.பா.மோகன் சார் எவ்வளவு சூழ்நிலையிலும், அவருடைய மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத போதும் கூட இந்த கேசை வாதாடி ஜெயிச்சு போராடி வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார்'' என்றார்.