Skip to main content

மருத்துவமனையில் ஜெயலலிதாவை நான் நேரில் பார்த்தேன்: ஏ.கே.போஸ்

Published on 27/09/2017 | Edited on 27/09/2017
மருத்துவமனையில் ஜெயலலிதாவை நான் நேரில் பார்த்தேன்: ஏ.கே.போஸ்

ஜெயலலிதாவை தான் நேரில் பார்த்ததாகவும், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழுடன் சென்ற போது ஜெயலலிதா கையசைத்து வாழ்த்தியதாகவும் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவுடன் முதலமைச்சரிடம் வாழ்த்து பெறுவதற்காக வெற்றி சான்றிதழுடன் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றேன். காலை 10 மணிக்கு அங்கு சென்றபோது தலைமைக்கழக நிர்வாகிகள், அமைச்சர்கள் மருத்துவமனை 2-வது மாடியில் அமர்ந்திருந்தனர். அவர்களுடன் நான் சிறிது நேரம் இருந்தேன். பிறகு காலை 11 மணியளவில் அம்மாவின் உதவியாளர் பூங்குன்றன் அறைக்கு சென்றேன்.

அப்போது உதவியாளர் பூங்குன்றன் அம்மா சிகிச்சை பெற்று வருகிறார். நீங்கள் வெற்றி பெற்றதை டெலிவி‌ஷன் மூலம் பார்த்தார். மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். எனவே இன்னும் 5 நாட்களில் அம்மா கார்டன் வந்து விடுவார். அங்கேயே வந்து பூங்கொத்துடன் அம்மாவிடம் வாழ்த்து பெற்று செல்லலாம். இப்போது பார்க்க வேண்டாம் என்று கூறினார்.

நான் எப்படியாவது அம்மாவை பார்த்துவிட வேண்டும் என்று ஆர்வமாக நின்று கொண்டிருந்தேன். மதியம் 2.30 மணியளவில் கார்டனில் பணியாற்றும் பாதுகாவலர்கள் 3 பேர் அங்கு நின்று கொண்டிருந்தனர். அவர்களிடமும் அம்மாவை பார்க்க வேண்டும் என்று கூறினேன். அப்போது அவர்கள் சிறிது தயக்கத்துடன் அருகே உள்ள கண்ணாடி அறைக்குள் என்னை அழைத்துச் சென்றனர்.

நான் நின்றிருந்த இடத்திற்கும், அம்மா சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த அறைக்கும் 15 மீட்டர் தூரம் இருக்கும். அந்த அறையின் கண்ணாடியின் மீது போடப்பட்டிருந்த திரையை சிறிது விலக்கி என்னை பார்க்கும் படி பாதுகாவலர்கள் கூறினர்.

அப்போது அம்மாவை நான் நேரில் பார்த்தேன். என்னை பார்த்ததும் அம்மா படுத்திருந்த நிலையிலேயே கைகளை அசைத்து என்னை வாழ்த்தினார். ஒரு வினாடியில் பாதுகாவலர்கள் என்னை அங்கிருந்து வெளியே அழைத்து வந்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்