தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக நேற்று (13.08.2021) இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண்மைக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் தொடங்கியது.
பொது நிதிநிலை அறிக்கையைத் தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்திருந்த நிலையில், தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக வேளாண்துறை பட்ஜெட்டை வேளாண்துறை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.
அப்போது வேளாண் பட்ஜெட் உரையைத் தொடங்கிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், "வேளாண் மக்கள் பெருமிதம் கொள்ளும் வகையில் வேளாண் - உழவர் நலத்துறை என பெயர் மாற்றப்பட வைத்தவர் முதல்வர் மு.க. ஸ்டாலின். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இந்தப் பட்ஜெட்டைக் காணிக்கையாக்குகிறேன். நிச்சயமில்லாத வாழ்க்கையிலிருந்து நிம்மதியான வாழ்க்கைக்குக் கொண்டு சேர்த்தது வேளாண்மையே. விவசாயிகளிடம் கருத்து கேட்ட பின்னரே இந்தப் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. திருச்சி, தஞ்சை, கோவை, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்தேன். விளைநிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக ஆவதால் சாகுபடி பரப்பு குறைந்துவருகிறது. மக்களாட்சிக்கு விரோதமாக தனித்து முடிவெடுத்து செயல்படுத்தும் போக்கை தமிழக அரசு கடைப்பிடிக்காது.
கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டேர் சாகுபடி செய்து தமிழகத்தின் நிகர சாகுபடி பரப்பை 60 விழுக்காடு என்பதை 75 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். உணவு தன்னிறைவை தமிழகம் ஓரளவு எட்டிவிட்டது. இருபோக சாகுபடி பரப்பை, அடுத்த 10 ஆண்டுகளில் 20 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என தொடர்ந்து உரையாற்றிவருகிறார்.