நாமக்கல் மாவட்டம், சங்ககிரியில் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, "ஏழை, எளிய மக்களுக்காகவும், அவர்களின் நலனுக்காகவும் அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கினார். ஜெயலலிதாவும் அப்படியே வழிநடத்தினார். அதே பாதையில் தானும் செல்வேன். கடைக்கோடி தொண்டன் தான் ஒரு பொதுச்செயலாளரைத் தீர்மானம் செய்ய முடியும் என்று எம்.ஜி.ஆர். கூறியுள்ளார். இந்த ஷரத்து என்பது இந்தியாவில் வேறு எந்த காட்சியிலும் கிடையாது. ஒரு இயக்கத்தை துவங்கும்போது நான்கு பேர் சேர்ந்து யாரையும் நீக்க முடியாது, நீக்கவிடவும் கூடாது என்பதற்காக விதிகள் இயற்றப்பட்டன.
அ.தி.மு.க.வின் சட்டவிதிகள் இயற்றும் போது, கட்சித் தொண்டர்களின் ஆசைப்படிதான் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்க முடியும். இப்போது மூன்றாவது தலைமுறை என வைத்துக் கொள்வோம். தொண்டர்களுடைய விருப்பப்படி எல்லாமே நிறைவேறும். தொடர் தோல்விகளில் இருந்து மீட்டெடுத்து ஜெயலலிதா சொன்னபடி, 100 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று மக்களுக்கு பாடுபடும்.
ஏழை, எளிய மக்களுக்காக அ.தி.மு.க. பாடுபடும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். அதனை நிறைவேற்றுவதே எனது கடமை. வரும் காலங்களில் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று தமிழக மக்களுக்காகத் தொடர்ந்து பாடுபடும். கால சூழ்நிலைக்கு ஏற்றார் போல் தான் செயல்பட முடியும், 33 ஆண்டு அனுபவத்தில் சொல்கிறேன், இதுவும் கடந்துப் போகும். சொத்து வரி உயர்வை ஏற்றுக் கொள்ள முடியாது, அதனை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். ஒரே தலைமை வேண்டும் என்பதே அ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. மாற்றம் என்பது மிக விரைவில் ஏற்படும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.
முன்னதாக, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் உள்ளிட்ட புகழ் பெற்ற கோயில்களில் சசிகலா வழிபாடு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.