புதிய அமைச்சர்கள் மற்றும் துணை முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து தமிழக முதல்வர் அறிக்கை ஒன்றை வெளியிடட்டிருந்தார். அதில் 'தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டங்களை மிக உன்னிப்பாக கவனித்து ஆய்வு செய்து வருகின்றனர். எந்த விமர்சனத்திற்கு ஆளாகாமல் கவனித்து துறையின் மூலம் மாநிலத்தை வளப்படுத்த வேண்டும். செந்தில் பாலாஜியை வைத்து திமுகவுக்கு எதிரான சதி செயல்களை செய்ய ஒரு கூட்டம் திட்டமிட்டது. செந்தில் பாலாஜியின் தியாகத்தை நான் வாழ்த்தியதை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதற்கு விலையாக 15 மாத சிறையை செந்தில் பாலாஜி ஏற்றது தான் தியாகம். கடந்த கால உழைப்பு, நிகழ்கால திறனை மனதில் வைத்து தான் புதிய அமைச்சர்களுக்கு பொறுப்பை ஒப்படைத்துள்ளேன். திராவிட மாடல் ஆட்சி நாட்டுக்கே முன்மாதிரி ஆட்சியாக அமைய நாம் உழைப்போம்' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் வலைத்தளத்தில் செந்தில் பாலாஜி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'செந்தில்பாலாஜியின் தியாகத்தை நான் வாழ்த்தியதைச் சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவரை வைத்து கழகத்துக்கு எதிரான சதிச்செயல்களைச் செய்ய ஒரு கூட்டம் திட்டமிட்டது. அதற்கு விலையாக 15 மாத சிறையை ஏற்றதுதான் தியாகம். தன்னால் இயக்கத்திற்குக் களங்கம் வரக்கூடாது என்று நினைப்பவர்களால்தான் இந்த இயக்கம் இயங்குகிறது' என இன்றைய அறிக்கையில் என்னை தாங்கிப்பிடித்துள்ள தாயுமானவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் கோடிபல. நூறு ஆண்டுகள் பெரும் தவம் செய்தாலும், உலகு காக்கும் உயர் கொள்கைக் கொண்டவரின் இந்த உன்னதமான அன்பை பெற இயலுமோ? உங்கள் கைகளை இறுகப்பற்றிக் கொள்கிறேன் வாழ்நாள் முழுமைக்கும்.!' என தெரிவித்துள்ளார்.